வடக்கு நோக்கி திரும்புதல் Turning Northward 61-0129 1. ....... ஜலதோஷம் --- சாத்தான் அதை எனக்குக் கொடுத்தான், நான் அதைத் திரும்ப அவனுக்கே கொடுத்தேன். மீண்டும் அதை எனக்குக் கொடுத்தபோது, நான் திரும்ப அவனுக்கே அதைக் கொடுத்துவிட்டேன். ஆகவே, சபையை பிரதிஷ்டை செய்யும் நேரம் வரும்வரை, அவ்விதமாகவே செய்து வந்தேன். கடைசியாக அவனை விட்டுவிலகி, சபையின் பிரதிஷ்டைக்கு சென்றேன். இந்த மதியவேளையில், இந்த பெட்டி போன்ற ஒன்றின் மேல் நிற்பது... பாத்திரங்களைக் கழுவ என்னுடைய தாயார் என்னை ஒரு பெட்டியின் மேல் நிறுத்தும் நாட்களுக்கு என்னைக் கொண்டு செல்லுகிறது. நல்லது, இந்த மதிய வேளையில் அதே காரியத்தை (கழுவுதல்) நாம் செய்கிறோம் என்று நம்புகிறேன், ஆகவே தேவன் அதை ஆசீர்வதிப்பாராக! 2. ஒரு சில அறிவிப்புகள், நான் மற்றொரு நாளில் ஹூஸ்டனில் அந்த அறிவிப்புகளை செய்ய வேண்டியதாயிருந்தது. இங்கே என்னிடத்தில் சிறிய காகிதத்துண்டு கொடுக்கப்பட்டது; அதில், சகோ. வான் ஹூப்... வான் ஹூஸ் மற்றும் டபள்யு. பி. ஹின்ஸ் இருவரும் பிப்ரவரி 27-ம் தேதி முதல் மார்ச் 5-ம் தேதி வரை ஃபீனிக்ஸ், அரிசோனாவில் இருப்பார்கள் என்று அறிவியுங்கள் என்று இருந்தது. அதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். மேலும், நாளை இரவு, இங்கே சகோதரர் ஓரல் ராபர்ட்ஸ் பேச இருக்கிறார் என்று நினைக்கிறேன். இதே அரங்கத்தில்தானா? இரவுவிருந்தில். மேலும் பிரசங்கபீடத்தில் நிச்சயமாகவே அவர் தேவனுடைய ஒரு “சிறந்த வேலைப்பாடாக” இருக்கிறார். அவர் ஒரு விசுவாசமுள்ள, அருமையான தேவனுடைய மனுஷனாக இருக்கிறார். நாளை இரவு சகோதரர் ராபர்ட்ஸ் பேசுவதை கேட்க வருவது, உங்களுக்கு நன்மை பயக்கும் என்பதில் நான் நிச்சயமுள்ளவனாயிருக்கிறேன். பிறகு, காலை ஆகாரம் மற்றும், அதை தொடர்ந்து அநேக... அநேக... அங்கே அநேகர் ஏற்கெனவே திரைக்குப்பின்னால் அதற்குண்டான சீட்டைப் பெற்றதைக் கண்டேன். அது அருமையானது. ஆகவே, நாங்கள் இந்த கன்வென்ஷனில் இருப்பதைக் குறித்து எப்பொழுதுமே மகிழ்ச்சியுள்ளவர்களாக இருக்கிறோம். 3. இன்னும் சில நிமிடங்களில் அல்லது நான் பேச ஆரம்பித்தவுடன், உங்களுக்கு ஒரு வகையான கூட்டம் வைக்கப்பட்டிருக்கிறது. என்னால் முடிந்தவரை, என்னுடைய வார்த்தைகளை சுருக்கிக் கொள்ளுகிறேன். முதலாவது என் தொண்டை கரகரப்பாயுள்ளது, அடுத்தது, நேரத்தை சுருக்கிக்கொள்ள வேண்டும். ஏற்கெனவே நீங்கள் இரண்டு மணி நேரமாக இங்கே இருக்கிறீர்கள். நீங்கள் களைப் பாயிருக்கிறீர்கள் என்று அறிவேன். இப்பொழுது, நாளை அல்லது அடுத்த ஞாயிறு, கர்த்தருக்கு சித்தமானால் அடுத்த ஞாயிறு (பிப்ரவரி 5-ம் தேதி) மாலையில் டூசானில், 'அசெம்பிளிஸ் ஆப் காட்' சபையில் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்போம். அந்த கூட்டம் அரிசோனாவில் உள்ள டூசானில், அடுத்த ஞாயிறு மாலை ஏழு முப்பது மணிக்கு தொடங்கும். பிறகு அங்கிருந்து புறப்பட்டு மேற்கு கடற்கரையில், லாஸ் ஏஞ்சலஸ்க்கு கீழேயுள்ள 'லாங் பீச்' என்ற இடத்துக்கு போகிறோம், அவ்வாறே என்று நான் நம்புகிறேன். அதற்கடுத்த கூட்டம் பேக்கர்ஸ்ஃ பீல்டு -க்கு (Bakersfield) அருகில் இருக்கும் என்று நம்புகிறேன். பிறகு கிழக்கு நோக்கி செல்கிறோம். அதன்பிறகு கர்த்தருக்கு சித்தமானால் நான் ஜூரிஸில் இருப்பேன். அதே வேளையில் இந்த மனிதர்களும் அங்கே ஜூரிஸ் மற்றும் எருசலேமில் இருப்பார்கள் என்று நம்புகிறேன். மேலும் நம்முடைய கர்த்தர் வாழ்ந்த இடமாகிய எருசலேமிற்கு ஒருமுறை போக விரும்புகிறேன். இந்த பிற்பகலில் இங்கே இருக்கிற என்னுடைய நல்ல நண்பர்களான அநேகருக்கு வாழ்த்துக்கள் சொல்ல விரும்புகிறேன். சகோதரர் மேக்னாசன், சகோதரர் ரோட்ஸ் மற்றும் அநேகரையும் சுற்றிலும் இங்கே நான் காண்கிறேன். அவர்களுடைய பெயர்களை நான் அழைத்தால் சற்று அதிகமான நேரத்தை அது எடுத்துக் கொள்ளும். சற்று முன்பு சிறிய சகோதரர் ஸ்மித் வந்து அவர் தனது கரங்களால் என்னை அணைத்தார். என்னே ஒரு அருமையான ஐக்கியத்தின் நேரம்! 4. இப்பொழுது வேத வசனத்தை வாசிக்கையில், உபாகமம் 2-ம் அதிகாரம் 3-ம் வசனத்தில் இருந்து ஒரு பாடத்தை எடுத்துப் போதிக்க விரும்புகிறேன். “நீங்கள் இந்த மலைநாட்டைச் சுற்றித் திரிந்தது போதும்; வடக்கே திரும்புங்கள்.” “வடக்கே திரும்புதல்” என்கிற பொருளின் பெயரில் பேச விரும்புகிறேன். செங்கடலின் மறுபக்கத்தில், இஸ்ரவேலர் நடனமாடி சத்தமிட்டு களிகூர்ந்து கொண்டிருந்த போது, அங்கிருந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை அடைய வெறுமனே சில நாட்களே இருந்த நிலையில், அதை அடைய இன்னும் நாற்பது வருடங்கள் ஆகும் என்பதை நினைத்துப் பார்ப்பது அவர்களுக்கு எவ்வளவு கடினமானதாக இருந்திருக்கும். அது அந்தவிதமாக இல்லாமல் மிக குறுகிய நேரமாக மாத்திரமே இருந்தது. நீங்கள் ஒரு வாகனத்தில் சென்றால், ஒன்றரை மணி நேரத்தில் செல்லக்கூடும் என்று நினைக்கிறேன். நடந்து சென்றால், இரண்டு நாட்களில் செல்லலாம் அல்லது மூன்று, நான்கு நாட்களில் செல்லலாம். அதுபோன்று மிகவும் எளிதாக, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை சென்றடைய முடியும். ஏறக்குறைய தாங்கள் அங்கே வந்துவிட்டோம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டவர்களாய், விடுதலையின் மகத்தான சத்தத்தை அவர்கள் கொண்டிருந்து, தேவன் அவர்களுக்காக என்ன செய்தார் என்பதை கண்டு, தேவனை துதித்துக் கொண்டிருந்த அவர்களை, இன்னும் தேவன் அவர்களுக்கு வாக்குத்தத்தம் செய்த அந்த முழு தேவனுடைய வாக்குத்தத்தத்தை அடைய நாற்பது வருட தூரத்தில் இருந்தனர் என்று அவர்களை நம்பச் செய்வது எவ்வளவு கடினமானதாக இருந்திருக்கும். 5. கிருபையானது, அவர்களுக்கு மகத்தான காரியங்களை அளித்திருந்தது. கிருபையானது, அவர்களுக்கு பஸ்கா ஆட்டுக்குட்டியை அளித்திருந்தது. கிருபையானது, அவர்களுக்கு ஒரு தீர்க்கதரிசியை அளித்திருந்தது. மேலும் கிருபையானது, அவர்களுக்கு ஒரு தேவதூதனை அளித்திருந்தது. அவர்களுடைய பாவங்களுக்காக, அங்கே பஸ்கா ஆட்டுக்குட்டி இருந்தது. அவர்களுக்கு ஆலோசனை சொல்ல, தீர்க்கதரிசி இருந்தான். அவர்களுக்கு வழிகாட்டியாக, தேவதூதன் இருந்தான். கிருபை எல்லாவற்றையும் அவர்களுக்கு அளித்திருந்தது. இவையெல்லாம் இருந்தும் கூட, அவர்கள் நியாயப்பிரமாணத்தையே விரும்பினர். அவர்கள் ஏதேனும் பிரமாணத்தைக் கொண்டிருப்பதற்கு முன்பாகவே, கிருபையானது எகிப்திலிருந்து தப்பிக்கும் வழியை அவர்களுக்கு அளித்திருந்தது. அது, அவர்கள் பெற்றிருந்த எழுப்புதல்களிலேயே, மகத்தான எழுப்புதல் ஒன்றை அவர்களுக்கு அளித்திருந்தது. மகத்தான தேவனுடைய வல்லமைகளை அவர்கள் இந்த எழுப்புதலில் கண்டிருந்தார்கள். இந்த எழுப்புதலில், உலகத்தில் உள்ள மற்றவர்கள் இருளில் இருக்கும்போது, இவர்கள் மாத்திரம் வெளிச்சத்தைக் கண்டவர்களாயிருந்தனர். இந்த எழுப்புதலில் அடிமைத் தனத்திலிருந்த கபடற்ற ஜனங்களை, தேவனுடைய வல்லமையான கரம் வெளியே கொண்டு வருவதை, அவர்கள் கண்டிருந்தனர். இந்த எழுப்புதலில் செங்கடலை அவர்கள் கடந்த போது, அனைத்து எதிரிகளும் தங்களுக்கு பின்பாக அங்கே மரிப்பதைக் கண்டனர். ஏன் அவர்கள் அதனுடன் வேறு எதையாவது சேர்க்க விரும்ப வேண்டும்? 6. நாற்பது வருடங்களுக்கு முன்பாக நம்முடைய பெந்தெகொஸ்தே பிதாக்கள் செய்தது போலவே, இஸ்ரவேலர் செய்தனர் அல்லது அதை காட்டிலும் சற்று அதிகமான நிலையில்... அவர்கள் (இஸ்ரவேலர்) கண்டிருந்ததை நாம் கண்ட பிறகு, சபையானது தான் பெற்ற எழுப்புதல்களிலேயே வல்லமையான ஒன்றை பெற்றது. தெய்வீக சுகமளித்தல், மக்கள் அடிமைத்தனம் மற்றும் ஸ்தாபன கட்டுகளிலிருந்து வெளியே அழைக்கப்படுதல், மேலும் ஒரு விடுதலைக்குள்ளாக மக்கள் கொண்டுவரப்படுதல் போன்றவற்றை (சபை) கண்டது. கிருபையானது அவர்களுக்கு தேவையான எல்லாவற்றையும், அவர்களை வழிநடத்த தேவனுடைய தூதன், தீர்க்கதரிசிகள், மகத்தான மனிதர்களையும் அளித்திருந்தது. 7. கலிபோர்னியாவில் அந்த எழுப்புதலை கொண்டிருந்த பொழுது, அசூசா வீதி கூட்டங்களில் சபைக்கு பாடல் புத்தகத்துடன் வருவதை அவமானமாக எண்ணினார்கள் என்று ஜனங்கள் பேசிக்கொள்வதை நான் கேட்டேன். அவர்கள் ஆவியில் பாடினார்கள். பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்ட வார்த்தைகளைக் கொண்டு அவர்கள் பாடல்களைப் பாடினார்கள். ஆவியில் நடனம் ஆடினார்கள். அவர்கள் மகத்தான நேரத்தை உடையவர்களாக இருந்தார்கள். தேவனுடைய வார்த்தையானது, அவர்களுடைய பாவங்களிலிருந்து அவர்களை வேறு பிரித்து, பரிசுத்தமாக்கப்படுதலுக்குள்ளாக கொண்டு வருவதற்காக காத்திருந்தனர். தாங்கள் மரணத்திலிருந்து ஜீவனுக்குள்ளாக பிரவேசித்திருந்ததை அவர்கள் அறிந்திருந்தனர். என்னே ஒரு எழுப்புதலை நாற்பது வருடங்களுக்கு முன்பாக அவர்கள் உடையவர்களாய் இருந்தனர்! ஆனால் இஸ்ரவேலர் செய்தது போலவே, நம்முடைய பெந்தெகொஸ்தே பிதாக்களும் செய்யக்கூடாத மோசமான தவறை செய்தார்கள். அந்த தவறானது மற்றொரு நாற்பது வருடம் இஸ்ரவேலரை வனாந்திரத்தில் தங்க வைத்தது. அவர்கள் எல்லாவற்றையும் பெற்றிருந்தும், அவருடைய கரத்தின் கிரியைகளைக் கண்டிருந்தும், கிருபையின் கனியானது அவர்களுடைய எல்லா தேவைகளையும் அளித்திருந்தும் - ஒரு பாடல் புத்தகம் கூட தேவைப்படாத அளவிற்கு அவர்கள் இருந்தும், அதில் திருப்தியடையாமல் இருந்ததைக் காண்கிறோம். நான் அதை அவர்கள் நாட்களில் பார்த்திருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். 8. ஆனால் அந்த எல்லா காரியங்களுக்கும் பிறகு, அந்த மாமிச பிரகாரமான இஸ்ரவேலர் மற்றும் இந்த ஆவிக்குரிய இஸ்ரவேலர்... மாம்சபிரகாரமாக, தேவன் அவருடைய ஜனங்களை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு எடுத்துச் சென்றது போல, ஆவிக்குரியப் பிரகாரமாக அவருடைய சபையை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குக் கொண்டு செல்கிறார். இஸ்ரவேலர்கள், அவர்களுடைய பாதையில் மகத்தான நேரத்தைக் பெற்றபிறகு, கிருபையானது அவர்களுக்கு தேவையான எல்லாவற்றையும் அளித்திருந்தபோதும் கூட, அவர்கள் தாங்களாகவே ஏதோவொன்றை செய்ய வேண்டுமென்றும், செய்யும்படியான ஏதோ ஒரு காரியத்தை தாங்கள் பெற்றிருக்கிறோமென்றும் தேவனுக்கு காண்பிக்க விரும்பினார்கள். சபையானது அந்த நிலையை அடையும்போது அது எப்பொழுதும் தோற்றுப்போகிறது. அதாவது, நானோ, நீங்களோ அல்லது எந்த மனிதனோ, தேவனுடைய கரத்தின் கிரியைகளில் தன்னுடைய கரத்தை வைத்து அதிலிருந்து ஏதோவொன்றை எடுத்துப்போடவோ, அல்லது சேர்க்கவோ முயற்சி செய்வது, அதுதான் காரியமாயிருக்கிறது. தேவன் நமக்களித்திருக்கின்ற அதே வழியில் அதை விட்டுவிட வேண்டும். ஆவியானவர் முன் செல்கிறபடி, எழுப்புதல் முன் செல்லட்டும். 9. அவர்கள் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலைப் பின்பற்றி இருப்பார்களானால், தேவனுடைய முழு வாக்குத்தத்தத்தை அடைய இந்த மக்களுக்கு வெறும் எட்டு அல்லது பத்து நாட்கள் மட்டுமே ஆகியிருக்கும். இந்த நாட்களில், நம்முடைய பெந்தெகொஸ்தே பிதாக்களாகிய இந்த ஜனங்கள் பரிசுத்த ஆவியின் நடத்துதலைப் பின்பற்றி முன்னே சென்றிருப்பார்களானால், தேவனுடைய வாக்குத்தத்தத்தின் முழுமையை அடைய சில நாட்களே ஆகியிருக்கும். ஆனால் அவர்கள் செய்தது போலவே, நாமும் ஏதோவொன்றை செய்யவேண்டியதாயிருந்தது. யாத்திராகமம் 19-ம் அதிகாரத்தில் இஸ்ரவேலர் எப்பொழுதும் செய்யப்பட்ட தவறுகளிலேயே மிக மோசமான தவறை செய்தார்கள். கிருபையானது அவர்களுக்கு எழுப்புதல்களைக் கொடுத்து இந்த காரியங்களை எல்லாம் அளித்திருந்த பின்பும், அவர்கள் நியாயப்பிரமாணத்தை தேடினார்கள். நமக்கு வேதாகம பள்ளிகள் மற்றும் இறையியலில் பயிற்சிவிக்கப்பட்ட ஊழியக்காரர்கள் இருந்தாலும், அவர்கள், “நாங்கள் இதை விசுவாசிக்கிறோம்”, “நாங்கள் அதை விசுவாசிக்கிறோம்” என்று ஏதோவொன்றைக் குறித்து வாக்குவாதம் செய்து, சகோதர சிநேகத்தை அல்லது ஐக்கியத்தை உடைத்து, உலக ஜனங்களைப் போல இருக்க விரும்புகிறார்கள். தேவன் அளித்த அதே வழியில் அதை போகவிட்டிருப்பார்களானால், எல்லாம் சரியாக இருந்திருக்கும். 10. ஆனால், நாம் எப்பொழுதும் தேவனுடைய திட்டத்தில் நம்முடைய திட்டங்களை வைக்க முயற்சிக்கிறோம். தேவனுடைய ஆவிக்குள்ளாக, நம்முடைய திட்டங்களை நுழைக்கும் போதும், வேதசாஸ்திரத்தை நுழைக்கும் போதும், அது தேவனுடைய ஆவியை எடுத்து போடுகிறது. அந்த வழியில் தான் அது அந்த நாளில் இருந்தது. அவர்கள் பிரயாணத்தில் இருந்தார்கள், இருப்பினும் தாங்களாகவே ஏதோவொன்றை செய்ய விரும்பினார்கள். வாக்குவாதங்களின் மூலமாகவும், தொடர்ச்சியான அவர்களுடைய காரியங்கள் மூலமாகவும், தேவனுடைய ஆவியை தங்களிடத்திலிருந்து துரத்தி விட்டதை அப்பொழுது கண்டுகொண்டார்கள். அது மிகப்பெரிய தவறாக இருந்தது. நம்முடைய (பெந்தெகொஸ்தே) பிதாக்கள் அதே காரியத்தை செய்தபோது, அது மிகப்பெரிய தவறாக இருந்தது. பரிசுத்தஆவி முதன்முறையாக அசூசா வீதியிலும், உலகத்தின் பல பாகங்களிலும் விழுந்த பொழுது, உலகத்தை வெளியேற்றி, பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலை நாம் தொடர்ந்து போக அனுமதித்திருந்தால், நாம் இந்நேரம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் இருந்திருப்போம். ஆனால், நாம் அதிலிருந்து ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் விலகி இருக்கிறோம். அவர்கள் செய்தது போலவே நாமும் செய்திருக்கிறோம். வேறொரு தொல்லையும் சபைக்குள் வந்துவிட்டது. நம்முடைய சகோதரர்களை நேசித்து, தொடர்ந்து முன்னேறி செல்வதற்கு பதிலாக, நாம் நம்மை ஸ்தாபனமாக்கிக் கொள்ள விரும்பினோம். அதை ஏன் அப்படியே விட்டிருக்கக்கூடாது? “என் பரம பிதா நடாத நாற்றெல்லாம் வேரோடு பிடுங்கப்படும்.” ஆகவே, மற்ற நபரை வெளியேற்றும்படி ஸ்தாபன தடைகளைக் கொண்டு வருவது நமக்கு என்ன நன்மை செய்யப்போகிறது? நாம் ஏதோவொன்றை தற்காத்துக் கொள்வதை (fence up) மட்டுமே செய்கிறோம். 11. இப்பொழுது, இது போன்று சொல்லப்படுகிற ஒரு சிறிய கதை உண்டு. ஆவியினால் நிரப்பப்பட்டுள்ள ஒரு கூட்ட மக்களுக்கு முன்பாக பேசும்படியான சிலாக்கியத்தை பெற்றிருக்கும்பொழுது, இந்த பிரசங்கபீடத்திலிருந்து இந்த கதையை சொல்வது தகுதி இல்லாதது போல் இருக்கலாம். இரண்டு குரங்குகள் ஒரு மரத்தின்மேல் அமர்ந்துகொண்டு ஒன்றையொன்று பார்த்துக் கொண்டிருந்தன. அவைகள் கீழ்நோக்கி, ஏழையான மனித வர்க்கத்தைப் பார்த்து, “மனிதர்கள் எவ்வளவு பரிதாபத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள், இல்லையா? நம்மிலிருந்து தோன்றியதாக அவர்கள் சொல்கிறார்கள். அது தவறு. நான் சாப்பிடுகிற அதே தேங்காய்களை என்னுடைய சகோதர குரங்குகளும் சாப்பிடாதபடி என்னுடைய தென்னைமரத்தை சுற்றி வேலி அமைக்க மாட்டேன்” என்றது. பாருங்கள்? அதுதான் மனித வர்க்கம். சபையானது எப்பொழுதும் அதே வழியில் இருக்கிறது. 12. ஒருமுறை இஸ்ரவேலர் மற்ற தேசங்களைப் போல நடந்து கொள்ள விரும்பிய பொழுது, ஒரு ராஜா வேண்டும் என்று கேட்டார்கள். ஒரு ராஜாவை ஏற்படுத்தும்படி சாமுவேலை கேட்டார்கள். நல்லது. சாமுவேல் அவர்களிடம், “அது கிரியை செய்யாது. தேவனே உங்கள் ராஜாவாக இருக்கிறார். அவரே ராஜாவாக இருக்கட்டும்” என்றான். ஆனால், மற்ற தேசங்களைப் போல நடக்க வேண்டும் என்ற காரணத்தால் அவர்கள் ஒரு ராஜாவை கேட்டார்கள். தேவன் ராஜாவாக இருப்பதற்கு பதிலாக உலகத்தை மாதிரியாகக் கொண்டு மற்ற தேசங்களைப் போலவும், பெலிஸ்தியர்கள் போலவும் நடக்க விரும்பினார்கள். இஸ்ரவேலர்களின் நம்பிக்கைக்குரிய வயதான தீர்க்கதரிசியாகிய சாமுவேல் அவர்களை அழைத்து, “நிறைவேறாமல் போன ஏதாவது காரியத்தை நான் கர்த்தருடைய நாமத்தினாலே எப்போதாவது உங்களிடம் கூறினதுண்டா? எப்பொழுதாவது உங்களிடம் பணத்துக்காக கெஞ்சி, அல்லது உங்களுக்கு சொந்தமான ஏதாவதொன்றை நான் அபகரித்ததுண்டா ?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “இல்லை , நீர் எங்களிடம் பணத்திற்காக கெஞ்சினதில்லை. நீர் கர்த்தருடைய நாமத்தினால் சொன்ன எதுவும் நிறைவேறாமல் போனதில்லை. இருப்பினும், எங்களுக்கு ஒரு ராஜா வேண்டும்” என்று சொன்னார்கள். 13. பாருங்கள், மனிதன் தானாகவே ஏதோவொன்றை செய்ய விரும்புகிறான். அவன் தன்னுடைய அதிகாரத்தை காண்பிக்க விரும்புகிறான். பிற மக்களிடத்திலிருந்தும் அல்லது மற்ற நபரிடத்திலிருந்தும் தான் எவ்வளவு வித்தியாசப்பட்டவனென்றும் அல்லது எவ்வளவு பெரியவனாயிருக்கிறான் என்பதையும் காண்பிக்க விரும்புகிறான். அப்பொழுது தான் சரியாக தேவன் காட்சியில் இருந்து வெளியேறுகிறார். அன்றைக்கு இஸ்ரவேலானது இருந்தவிதமாகவே, எப்பொழுதும் இருந்து வருகிறது, அதாவது பலஜாதியான ஜனங்களைக் கொண்டவர்களாய், சிலர் ஒன்றை விரும்புவதும், வேறுசிலர் மற்றொன்றை விரும்புவதுமான அதே காரியத்தைத் தான் நாம் இன்றைக்கும் பெற்றிருக்கிறோம். வழக்கமாக மறுபுறம் இருக்கிற அந்த ஒன்றே வெற்றிப் பெறுகிறது. நிசாயா ஆலோசனை சங்கத்தில் நம்முடைய சபைகளானது நிறுவப்பட்ட பொழுது அதே காரியம் தான் நடந்தது. ஒருவர் ஒரு காரியத்தை விரும்பினார், மற்றவர் இன்னொரு காரியத்தை விரும்பினார். அந்த சிறிய பெந்தெகொஸ்தே குழுவானது வெளியே தள்ளப்பட்டது. அந்த அமைப்பானது (நிசாயா) எல்லாவற்றையும் மேற்கொண்டது 14. நிசாயா ஆலோசனை சங்கத்திற்குப் பிறகு, நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளானது, உபதேசங்களாக மாறினது. அவர்களுக்கென்று சொந்த மனிதர்களை தெரிந்துகொண்டு, அவர்கள் தங்கள் சொந்த விசுவாசத்தை உருவாக்கிகொண்டனர். அன்றொரு நாளில் நான் சொன்னது போல, 'நிக்கொ’ என்பதற்கு ‘மேற்கொள்ளுதல்' என்று அர்த்தம். 'நிக்கொலாய்' என்பதற்கு ‘சபையை மேற்கொள்ளுதல்' என்று அர்த்தம். எல்லா பரிசுத்தத்தையும் ஒரு மனிதனில் வைக்கவும், அந்த மனிதன் உங்கள் பாவத்தை மன்னிக்கவும், உங்கள் ஜெபத்தை அவர் ஏறெடுக்கச் செய்வதும், நீங்கள் உங்கள் விருப்பப்படி வாழ்ந்து, சபைக்கு பணத்தை மட்டும் செலுத்தினால் போதும் என்பது போன்றவைகள். அது தேவனுடைய சித்தம் அல்ல. தேவனுடைய வார்த்தையானது சபை அங்கத்தினர் ஒவ்வொருவருக்குள்ளும் பரவுகிறது. நீங்கள் ஒரு தனிப்பட்ட நபராக இருக்கிறீர்கள். தேவன் இஸ்ரவேலருடன் ஒரு தேசமாக ஈடுபட்டார். உங்களிடத்திலும் என்னிடத்திலும் தனிப்பட்ட விதத்தில் ஈடுபடுகிறார். நாம் ஒவ்வொருவரும் நம்முடைய பாவங்களுக்காக தேவனுக்கு முன்பாக பதில் கூறவேண்டும். 15. பல ஜாதியான ஜனங்கள் என்று நாம் பார்க்கிறோம்... ஈசாக்கு ரெபெக்காளின் இரண்டு குமாரர்கள் உலகத்தில் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். எழுப்புதல் தோன்றுகிற ஒவ்வொரு முறையும் இரட்டையர்கள் பிறக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் நாம் எழுப்புதலைக் கொண்டிருக்கும் போது, இரட்டையர்கள் பிறக்கிறார்கள். ஏசா மற்றும் யாக்கோபு ஆகிய இருவரும் இரட்டையர்கள். ஒருவன் மாமிச பிரகாரமானவன். மற்றொருவன் ஆவிக்குரியவன். இப்பொழுது, நீங்கள் ஏசாவை நோக்கிப் பார்த்தால், யாக்கோபை போலவே அவனும் நல்ல மனிதனாயிருந்தான். குருடாயிருந்த வயோதிப தீர்க்கதரிசியான தன்னுடைய தகப்பனாரை கவனித்துக்கொள்ள விருப்பம் கொண்டிருந்தான். நல்நடத்தை விஷயங்களில் அவன் ஒரு நல்ல பையனாயிருந்தான் என்று நான் யூகிக்கிறேன். வேலையில் உதவி செய்பவனாயிருந்தான். யாக்கோபு ஒருவேளை சிறிது பெண்மைத்தன்மை கொண்ட, அம்மாவை சுற்றி வருகிற அம்மாவினுடைய பையனாயிருந்தான். ஆகவே, இயற்கையான ஒரு உலக மனிதனாக ஏசா நேசிக்கப்பட்டான். பிறப்புரிமையைக்குறித்து (சேஷ்டபுத்திரபாகம்) அவன் கவலையற்றவனாயிருந்தான். 16. ஆனால், யாக்கோபைப் பொறுத்தவரை ஒரு காரியத்தை எந்த வழியில் அவன் பெற்றுக்கொண்டான் என்பது, அவனுக்கு எந்த ஒரு வித்தியாசத்தையும் உண்டாக்கவில்லை. ஒரே ஒரு காரியம் மாத்திரமே அவனுடைய சிந்தையில் இருந்தது. அது சேஷ்டபுத்திரபாகம் மாத்திரமே. அவன் அதை எந்த வழியில் பெற்றான் என்பது காரியமல்ல. ஆவிக்குரிய விதமாக பிறந்துள்ள சபைகளுடைய காரியமும் அந்த விதமாகவே உள்ளது. கத்தோலிக்க சபை ஒரு எழுப்புதலைப் பெற்றிருந்த பொழுது, லுத்தரன் ஒரு எழுப்புதலைப் பெற்றிருந்த பொழுது, வெஸ்லி ஒரு எழுப்புதலைப் பெற்றிருந்த பொழுது, நாக்ஸ், கால்வின் போன்றவர்கள் எழுப்புதலைப் பெற்றிருந்த பொழுது, அது இரட்டையர்களை உற்பத்தி செய்தது. பெந்தெகொஸ்தேயினர் எழுப்புதலைப் பெற்றிருந்த போதும், அது இரட்டையர்களை உற்பத்தி செய்தது. மோசே எகிப்தில் எழுப்புதலைக் கொண்டிருந்த பொழுது, அது இரட்டையர்களை உற்பத்தி செய்தது. பலஜாதியான ஜனங்கள்... அவைகளில் ஒன்று - உலகத்தைப் போல இருந்து, உலகத்தைப் போல நடக்க விரும்பி, உலகத்திற்கேற்ற விதமாய் தங்களது செய்தியை அமைத்து கொள்பவர்களுக்கு. மற்றொன்று - உலகம் என்ன கூறுகிறது என்று கவலைப்படாமல், அது எவ்வளவு தரமானதாக தோன்றினாலும் அல்லது எவ்வளவு தரமற்றதாக தோன்றினாலும், பிறப்புரிமையைப் பற்றிக்கொள்ளுதல், தேவனைப் பற்றிக்கொள்ளுதல் போன்ற காரியங்கள் அவர்களுக்கு ஒரு பொதுவான விஷயமாகவே இருந்தது. அது எப்பொழுதும் அதே வழியில் தான் இருக்கிறது. என்னுடைய நண்பர்களே! இந்நாளிலும் அதே வழியில்தான் காரியம் இருக்கின்றது. பிறப்புரிமையைப் பிடித்துக் கொள்ளுங்கள். அவர்கள் அவனை எவ்வளவுதான் பெண்தன்மையுள்ளவன் என்று அழைத்தாலும், அவன் அதை (சேஷ்டபுத்திரபாகத்தை) எந்த வழியில் பெற்றிருந்தாலும், அது யாக்கோபுக்கு எந்த ஒரு வித்தியாசத்தையும் உண்டு பண்ணவில்லை. எப்படியாயினும், அவன் அதை பெற்றிருந்தான். அதே வழியில்தான் இன்றைக்கும் காரியம் இருக்கிறது. ஆவிக்குரியவர்களாயிருக்கிற மக்களுக்கு அது எந்த வித்தியாசத்தையும் உண்டு பண்ணுவதில்லை. அநேக நேரங்களில் சபையார் பிரசங்கிகளுடன் கரங்களை குலுக்கி சமரசம் (compromising) ஆகிவிடுகின்றனர். 17. சில நாட்களுக்கு முன்பு, “தேவனுக்கு பேரப்பிள்ளைகள் இல்லை” என்று டேவிட் டூப்லெஸ்ஸிஸ் (David duPlessis) நன்றாக கூறினார். அது உண்மை. நம்முடைய பெந்தெகொஸ்தே சபைகள் தங்களுடைய இளைஞர்களை சபைக்கு கொண்டு வந்து, அவர்களுக்கு ஒரு இடத்தை கொடுத்து, சபையில் அங்கத்தினர்களாக சேர்க்கின்றனர். அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, மறுபடியும் பிறக்கிற செயல்முறையில் வராமல், தங்கள் சொந்த வழியில் வருகிறார்கள். அவர்களை வெறுமனே சபைக்குள்ளாக கொண்டுவருவதை மாத்திரம் செய்கிறோம். அவர்கள் எதை பெற்றிருக்கிறார்கள்? மேல்புறம் தட்டையாக முடிவெட்டிக் கொண்டு, மற்ற உலகத்தாரைப் போல வீதிகளில் திரிந்து கொண்டிருக்கிற ஒரு கூட்ட ரிக்கிகளையும், (flat-top haircuts, Rickys), ஆவிக்குரிய நிலைப்பாட்டில் நிலைத்திருப்பதற்குப் பதிலாக உலகத்தைப் போல நடந்து கொள்ள முயற்சித்து, ஒப்பனை செய்து, (Make up, bobbed-hair) சிகை அலங்காரம், மற்றும் எல்லாவற்றையும் செய்கிற பெண்கள் கூட்டத்தையுமே பெற்றிருக்கிறார்கள். அது அவமானம். 18. நாம் நம்முடைய பெரிய மகத்தான சபைகளில், அநேக மகத்தான அசைவுகளைப் பெற்றவர்களாயிருந்தோம். ஆனால், நாம் நம்முடைய ஸ்தாபன அமைப்புக்காக ஊழியம் செய்து, அடுத்த நபரை வளரவிடாமல் தடுத்து (mow), அடுத்த நபரைக்காட்டிலும் நம்மை பெரியவராக ஆக்க முயற்சி செய்தோம். நாம் எதை பெற்றிருக்கிறோம்? மறுபடியும் பிறந்த தேவனுடைய பிள்ளைகளைக் கொண்டிருப்பதற்கு பதிலாக, ஒரு கூட்ட கலப்பின ஜனங்களையே பொரித்து (hatching) இருக்கிறோம். அதுசரி. கலப்பினம் உலகத்தின் அழிவுகளில் ஒன்றாயிருக்கிறது. ஒரு கலப்பினம் தன்னை திரும்பவும் பிரதியுற்பத்தி செய்து கொள்ள முடியாது. ஒரு கோவேறு கழுதை பிறக்கும் பொழுது.. ஒரு கோவேறு கழுதையானது, கோவேறு கழுதையாக இல்லாமல், வேறெதுவாகவும் இருக்க முடியாது. அவ்வளவுதான் அதன் காரியம். அது ஒரு அரைஇனமாயிருக்கிறது (half-breed). அது குதிரை இனத்தையும் சாராமல், கழுதை இனத்தையும் சாராமல் இருக்கிறது. அது எங்கிருந்து வந்ததென்றும், எங்கே போகிறதென்றும், அதனுடைய தகப்பன் யாரென்றும், அதனுடைய தாய் யாரென்றும் அதற்கு தெரியாது. அது ஒன்றும் அறியாததாயிருக்கிறது (ignorant). நீங்கள் அதனிடம் ஏதாவது சொன்னால், அது காதுகளை அடைத்துக்கொண்டு, 'ஹாவ்..ஹாவ்..' என்று கணைக்கும். அது எந்தவொறு மென்மையான காரியத்தையும் பெற்றிருக்கவில்லை. சில சமயங்களில் பிரசிங்கிக்க ஒரு கூட்ட கோவேறு கழுதைகளை நான் பெற்றிருக்கும் போது, ஹாட்டன்டாட்-ல் உள்ளவர்கள் எகிப்தின் இரவைப் பற்றி அறிந்திருக்கும் அளவுகூட, இவர்களுக்கு தேவனைப் பற்றி ஒன்றும் தெரியாது. அது காதுகளை அடைத்துக்கொண்டு, “அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன, அவ்விதமான காரியம் எல்லாம் கிடையாது” என்று கூறும். அது கலப்பினமாயிருக்கிறது. அவர் பெந்தெகொஸ்தே அல்லது வேறேதோ ஒரு அமைப்பை சேர்ந்தவராக இருக்கலாம். ஆனால் மறுபடியும் பிறந்த ஆண்களும், பெண்களும்... 19. எதையாவது நான் நேசிக்கிறேனென்றால், அது ஒரு அசலான, மரியாதை கொண்ட, வம்சாவளியில் வந்த குதிரையே. கலப்பின குதிரை அல்ல. யாராயிருந்தாலும், தான் இருக்கிற அதே இராஜ்யத்தினுடைய குடிமகனாக கொண்டுவர, எல்லையைக் கடந்து, அந்த சகோதரனுடைய கரங்களை குலுக்கி, பரிசுத்த ஆவியைப் பெற்று, ஐக்கியத்தையும், சகிப்புத்தன்மையையும் கொண்டவனாய், ஆவியின் இனிமையுடனும், மென்மையுடனும், வடக்கு நோக்கி திரும்புதல் எங்கேயிருந்து வந்தோம் என்பதையும், எங்கே செல்கிறோம் என்பதையும், தங்களை பற்றிப்பிடித்துக் கொண்டிருப்பது என்ன என்பதையும் அறிந்தவர்களாய், வம்சாவளியில் வந்த உண்மையான பெந்தெகொஸ்தே அனுபவத்தைப் பெற்றிருக்கிறவர்களையே நான் விரும்புகிறேன். அவன் என்ன செய்திருந்தாலும், மேலும் கீழுமாக குதித்து, தலையைக் குலுக்கி, ஊற்றுதல், தெளித்தல், அல்லது அவன் எப்படி ஞானஸ்நானம் பெற்றிருந்தாலும், அவன் சகோதரனாயிருக்கிறான். அவன் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கும் வரை, அவன் உன்னுடைய சகோதரன். ஒரு உண்மையான வம்சாவளியை சார்ந்த, மறுபடியும் பிறந்த பெந்தெகொஸ்தே அனுபவத்தைப் பெற்ற மனிதனோ, ஸ்திரீயோ, உங்கள் முழு இருதயத்தோடும் அதை விசுவாசிக்கிறீர்கள் அல்லவா..?... நிச்சயமாகவே..?.... 20. இந்த இரட்டையர்களுடைய எழுப்புதலில் ஒன்று, பயிற்றுவிக்கப்பட விரும்புகிற (to be schooled), அறிவை சார்ந்திருக்க விரும்புகிற ஒரு மனிதனை கொண்டு வருகிறது. அவர்கள் புதிய பிறப்பைக் குறித்ததான வாதத்தை தவிர்க்க முயற்சிக்கிறார்கள். சபையானது அதை தவிர்க்க முயற்சிக்கிறது. இன்று தண்ணீர் ஞானஸ்நானத்தின் மூலமாக ஜனங்களை கொண்டு வந்து, தண்ணீர் ஞானஸ்நானத்தின் மூலமாக அவர்களை சபைக்குள்ளாக கொண்டு வருகிறோம். நீங்கள் தண்ணீர் ஞானஸ்நானத்தின் மூலமாக, ஜனங்களை சபைக்குள் கொண்டு வரமுடியும். ஆனால், தண்ணீர் ஞானஸ்நானத்தின் மூலமாக அவர்களை கிறிஸ்துவுக்குள் கொண்டு வரவே முடியாது. நீங்கள் ஆவியினால் பிறக்க வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். அது சரி. நான் அடிக்கடி சொல்வது போல, மீண்டும் சொல்லுகிறேன். அது என்ன வகையான பிறப்பாக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை . எந்த ஒரு பிறப்பும் அலங்கோலமானதாக இருக்கிறது. அது பன்றிகளை அடைத்துவைக்கும் இடமாக இருந்தாலும் அல்லது சோளக்கொல்லையாயிருந்தாலும் அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட மருத்துவமனை அறையாயிருந்தாலும், பிறப்பு என்பது அலங்கோலமே. அதுபோலவே, புதிய பிறப்பு என்பதும் அலங்கோலமே. நீங்கள் செய்ய நினைக்காத காரியங்களை, அது உங்களை செய்ய வைக்கும். எல்லாவற்றிலிருந்தும், எல்லாவகையான பகட்டிலிருந்தும் உங்களைத் திருப்பி, கரங்களை உயர்த்தி கூக்குரலிட்டு, கூச்சலிட்டு, அழவைக்கும். நீங்கள் ஆசார விறைப்பு நடை வாய்ந்த வர்களான, சுய பாணியிலான (starchy, self-styled) குழுவுக்கு முன்பாக, அவமானகரமாக நடந்து கொள்கிறீர்கள். நீங்கள் புதிய பிறப்பைப் பெற்றிருக்கும்வரை, நீங்கள் அதை குறித்துக் கவலை கொள்ள மாட்டீர்கள். 21. நீங்கள் மறுபடியும் பிறந்தவர்களாய், புதிய பிறப்பினுள் வரவேண்டியவர்களாயிருக்கிறீர்கள். அவர்கள், “மற்ற அமைப்புகளைக் காட்டிலும் எங்கள் ஸ்தாபனமே மேலானதாக விளங்குகிறது” என்று சொல்லத்தக்கதாக, மற்றவர்களைத் தோற்கடித்து (beat) தங்களுக்கு அங்கத்தினர்களை சேர்ப்பதன் மூலம் புதிய பிறப்பை தள்ளிப்போட முயற்சி செய்யும் அந்த இடத்துக்கு வந்திருக்கிறார்கள். இதில் ஒன்றும் இல்லை, இது ஒரு காரியமே இல்லை . தேவனுடைய இராஜ்யமே முக்கியமாக எண்ணப்படுகிறது. நாமெல்லாரும் ஒரு இடத்திற்காக ஊழியம் செய்து கொண்டு இருக்கிறோம். நான் அசெம்பிளீஸ் சபையைச் சேர்ந்தவனாக இருந்தாலும், பாப்டிஸ்ட் சபையைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அல்லது ஒருத்துவத்தை அல்லது திரித்துவத்தை அல்லது ஐந்தத்துவத்தை அல்லது அது என்னவாக இருந்தாலும், நாம் ஒரே ஒரு கொள்கைக்காக மாத்திரம் ஊழியம் செய்ய விரும்புகிறோம். அது நம்முடைய பரலோக பிதாவுக்காக, மறுபடியும் பிறந்த பிள்ளைகளை மேலே உள்ள அந்த இராஜ்யத்தில் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே. அதற்கு (அந்த கொள்கைக்கு) வெளியே நாம் எவ்வளவுதான் ஊழியம் செய்தாலும், அது வீணாயிருக்கும். நாம் மனிதனால் உண்டாக்கப்பட்ட அமைப்புக்காக ஊழியம் செய்ய முயற்சிக்கிறோம். இரண்டும் இரண்டும் நான்கு என்பது எவ்வளவு உறுதியோ, அவ்வளவு உறுதியாக அது விழுந்து போகும் - விழுந்து போகத்தான் வேண்டும். அது மனிதனுடையது, அது விழத்தான் வேண்டும். தேவனுடைய காரியங்கள் மாத்திரமே நிலைநிற்கும். அவைகளுக்கு எதிராக எனக்கு ஒன்றும் இல்லை. அவைகள் சிறந்தவைகள் தான். ஆனால், மற்ற நபருடன் ஐக்கியம் கொள்ள முடியாதபடி, தடைகளை அது கொண்டுவரும்போது, அங்கேதான் அது மோசமாகிறது. நான் ஸ்தாபன அமைப்புகளை விரும்புவதில்லை என்பதாக சொல்லப்பட்டு வெளியேற்றப் பட்டேன். ஸ்தாபனங்களில் உள்ள ஜனங்களை நேசிக்கிறேன். ஆனால் ஸ்தாபனத்தையோ... “நாங்கள் இதை விசுவாசிக்கிறோம், மற்றவர்கள் அதிலிருந்து விலகியிருங்கள் என்றும், அந்த வியாபாரிகள் சங்க ஐக்கியத்திற்கோ அல்லது மற்ற எந்த ஸ்தாபனத்திற்கோ ஒத்துழைப்பு தரமாட்டோம்” என்பது போன்ற இடத்திற்கு வரும்வரை ஸ்தாபனங்கள் நல்லது தான். 22. அவர்கள் ஸ்தாபனமாக மாறும்பொழுது, நான் அவர்களிடமிருந்து விலகி செல்கிறேன். அது மிகவும் சரியானது. அப்படிப்பட்ட காரியத்தை நான் விசுவாசிப்பது இல்லை. ஆவியின் வழிநடத்துதலைப் பின்பற்றி, ஐக்கியம் கொண்டு, நாம் சகோதரர்களாக இருக்கிறோம் என்பதில் விசுவாசம் கொள்கிறேன். இதுவே, அதைப்பற்றி நான் விரும்புகிற காரியமாயிருக்கிறது. ஒரு கலப்பின கூட்டம், சீனாய் மலைக்கு சென்று நியாயப்பிரமாணத்தை பெற்றுக்கொண்டனர். இறையியல் படிப்பிலுள்ள அனைத்து முனைவர் பட்டங்களையும் (doctorate) அவர்கள் பெற்றிருக்கக்கூடும். எல்.எல்.டி., க்யூ.ஸ்.டி. போன்ற அனைத்து 'டி'-களையும் (L.L.D, Q.S.D) பெற்றிருக்கக்கூடும். நீங்கள் அறியவேண்டிய முதல் காரியம் என்னவென்றால், அது அவர்களை தொல்லைக்குள்ளாக்கினது. 23. இப்பொழுது, நியாயப்பிரமாணமானது அதனுடைய நோக்கத்தை நிறைவேற்றியது. தன்னுடைய நாளில் அது சரியானதாக இருந்தது. பிரமாணம் சரியானதையே செய்தது. அதனுடைய நாளில் அதனுடைய நோக்கத்தை நிறைவேற்றியது. அதுபோலவே, ஸ்தாபனங்களும் சரியானதையே செய்தது. அதனுடைய நோக்கத்தை பொருத்தவரை, அது சரிதான். ஆனால் ஞாபகம் கொள்ளுங்கள், நியாயப்பிரமாணமானது அவர்களை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு அழைத்துச் செல்லவில்லை. யோசுவாவே அவர்களை அங்கே கொண்டு சென்றான்; நியாயப்பிரமாணமல்ல, கிருபையே. எந்த ஸ்தாபனமும், தேவனுடைய சபையை அங்கே அழைத்துச் செல்லமுடியாது. தேவனுடைய முழுமையான ஆசீர்வாதமான வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு நம்மை கொண்டு செல்வது, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தின் மூலம் நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டுள்ள (shed abroad in our hearts) கிருபையே ஆகும். அது நிச்சயமாயிருக்கிறது. அவர்கள் அந்த காரியங்களை செய்யும்போது, கொடியதான தவறை செய்கின்றனர். அது (நியாயப்பிரமாணம்) அதனுடைய நோக்கத்தை நிறைவேற்றியது, மிகவும் நன்றாகவே இருந்தது; ஆனால், இனிமேல் அதனால் எந்த நன்மையும் இல்லை என்றதான நேரம் வந்திருக்கிறது. தேவன் அதை மரிக்கச் செய்வதினிமித்தம், கிருபையைக் கொண்டு, அவர்களுடைய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் அவர்களுடைய ஸ்தானத்தில் அவர்களை வைக்க முடியும். ஆகவே, தேவனுடைய கிருபையானது ஒவ்வொரு அங்கத்தினரையும், தீர்க்கதரிசிகளையும், போதகர்களையும், மற்றவர்களையும் (ஸ்தானத்தில்) வைக்கிறது. ஒரு ஸ்தாபனம் அதை செய்ய முடியாது. கரங்களை மேலே வைக்கிற ஒரு கூட்ட திருச்சபை மூப்பர்களை (presbyters) நீங்கள் கொண்டிருக்கக்கூடும். அதனால் எந்த பலனும் இல்லை (throwing water on duck's back) என்பதைத் தவிர சொல்வதற்கொன்றுமில்லை . அது (தேவனுடைய கிருபை), “பவுலையும் பர்னபாவையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள்” என்று பரிசுத்த ஆவியை திருவுளம்பற்ற செய்தது. அது, பரிசுத்த ஆவியானவர் ஆண்களையும் பெண்களையும் வேறுபிரித்து கிறிஸ்துவில் அவர்களுக்குரிய ஸ்தானத்தில் அவர்களை பொருந்திடச் செய்தது. அது உண்மையாய் இருக்கிறது. 24. இப்பொழுது, இஸ்ரவேலர்கள் அங்கிருந்து காதேஸ்பர்னேயாவுக்கு பிரயாணம் செய்தார்கள் என்று பார்க்கிறோம். காதேஸ்பர்னேயா, அங்கேதான் அவர்கள் எப்பொழுதும் செய்த தவறுகளிலேயே மிகவும் கொடிதான தவறை செய்தார்கள். காதேஸ்பர்னேயாவுக்கு வந்தபோது இஸ்ரவேலர்கள் அப்பட்டமான ஒரு தவறை செய்தார்கள் (real mistake). நல்லது, பிறகு அவர்கள் பன்னிரண்டு வித்தியாசமான குழுக்களையும் பன்னிரண்டு தலைவர்களையும் உடையவர்களாக இருந்தார்கள். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை வேவுபார்த்து, அங்கிருந்து ஏதாவது தகவல்களை பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், அவர்களை அங்கே அனுப்பினார்கள். அவர்கள் திரும்பி வந்தபொழுது, அவர்களில் பத்து குழுக்களானது, “அது நம்மால் முடியாது, வெறுமனே அதை சுதந்தரிப்பது கூடாத காரியம், அது மிகவும் கடினமான காரியம், அவர்களுடன் ஒப்பிடும்போது, நாம் மிகச் சிறியவர்களாகக் காணப்படுகிறோம், வெட்டுக்கிளிகளை போல இருக்கிறோம்” என்றார்கள். ஆனால் அங்கே அத்தாட்சியை கொண்டிருந்தவர்களாக இரண்டு பேர் இருந்தனர். அவர்கள் அத்தேசத்தில் இருந்தனர். அவர்கள் திரும்ப வந்தபொழுது, தேசத்தின் கனிகளை கொண்டிருந்தனர். அவர்கள் அங்கிருந்தனர் என்றும், அந்த தேசம் நல்ல தேசமாயிருந்தது என்றும் அறியும்படிக்கு அத்தாட்சியையும் அவர்கள் கொண்டு வந்திருந்தனர். நல்லது, ஒரு எழுப்புதலிலிருந்து நாம் பெற்றுக்கொள்ளக்கூடிய காரியமும் அவ்வாறே அமைந்துள்ளது - காட்சி அமைப்பில் இரண்டு காரியங்கள்; அது கோழி முட்டையை அடைக்காக வைப்பதைப் போன்று உள்ளது - நல்ல அடையிலிருந்து இரண்டு வகைகள். 25. மேலும், நீங்கள் அறிய வேண்டிய முதல் காரியம், அது ஒரு நல்ல தேசமாய் இருந்தது என்ற அத்தாட்சியுடன் யோசுவாவும் காலேபும் திரும்பி வந்தார்கள். அவர்கள் ஒரு அத்தாட்சியை உடையவர்களாய் இருந்தார்கள். ஒரு அத்தாட்சி; ஆனால், அது முழுமையான அத்தாட்சியாக காணப்படவில்லை. ஒரே ஒரு அத்தாட்சியை மாத்திரம் உடையவர்களாய் இருந்தார்கள். அதைத்தான், பெந்தெகொஸ்தேயினர் தேசத்தை கடந்து, செங்கடலைத் தாண்டி, எதிரிகளுடைய சவங்கள் மிதப்பதைக்கண்டு, வனாந்திர யாத்திரைக்குள் பிரவேசித்தபொழுது பெற்றார்கள். அவர்கள் அங்கே இருந்தனர் என்பதன் ஒரு அத்தாட்சியாக அந்நிய பாஷைகளை பேச தொடங்கினர். ஏதோ ஒரு நல்லகாரியம் அங்கிருந்தது என்று அவர்கள் அறிந்திருந்தனர். தாங்கள் சென்றடைந்த இடங்களுக்கு அப்பால் எங்கேயோ ஒரு தேசம் இருந்தது என்பதை அறிந்திருந்தார்கள். அது சரியே. ஆனால், அதுவல்ல முழு காரியம். நாம் அதிலேயே தரித்து, அதையே விதைக்கத் தொடங்கி விட்டோம். சரியே. தேவன், “உங்களில் ஒருவன் அந்நியபாஷைகளிலே பேசி கொள்ளும்போது, கல்லாதவர்கள் உள்ளே பிரவேசித்தால் அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்கள் என்பார்கள் அல்லவா? ஆனால் ஒருவன் தீர்க்கதரிசனம் சொல்லி, இருதயத்தின் இரகசியத்தை வெளிப்படுத்தினால், அவன் முகங்குப்புற விழுந்து, தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறார் என்பானே” என்றார். பவுல் அதை சொன்னான். 26. அந்நியபாஷையில் பேசுதலானது பரிசுத்த ஆவியின் ஒரு அத்தாட்சி என்று நாம் நிற்கும்போது, அது சரிதான். அது உண்மை . அது பரிசுத்த ஆவியின் அத்தாட்சியாய் இருக்கிறது, ஆனாலும் அதைத் தொடர்ந்து வருகிற மற்ற காரியங்களையும் கவனிக்க வேண்டும். ஆனால் நாம் அதை செய்தவுடன், மற்றவர்களை வெளியே வைத்திருக்க நம்முடைய தென்னை மரத்தைச் சுற்றி வேலியடைத்து, நம்மைத் தவிர மற்றொருவரும் பறிக்கமுடியாதபடி செய்கிறோம். அதன் காரணமாகத்தான் மற்றவர்கள் எங்கும் செல்ல முடிவதில்லை. பரிசுத்த ஆவியானவர் நம்மெல்லாரையும் வழிநடத்தி செல்ல அனுமதிப்பதற்கு மாறாக, இது நம்முடைய சுயநலமிக்க சொந்த யோசனையாய் இருக்கிறது. நாம் நாற்பது வருடங்களாக காத்திருந்தோம், ஒன்றும் நடக்கவில்லை . நீங்கள் இன்னும் அதே இடத்தில், அதே பழைய காரியத்திலேயே (அந்நியபாஷை பேசுதல்) நின்று விட்டீர்கள். ஓ என்னே ! 27. அவர்கள் ஒரு மோசமான தவறை செய்தார்கள் என்று நாம் பார்க்கிறோம். அவர்கள் ஒரு பெரிய சண்டைக்காரக் குழுவை எழுப்புகிறார்கள். ஒரு பெரிய சண்டைக்காரக் குழுவையே நாம் பெற்றிருக்கிறோம். ஒருவர், “கர்த்தருக்கு ஸ்தோத்திரம், நான் அசம்பிளியை சேர்ந்தவன், நீங்கள் ஒருத்துவத்தை சார்ந்தவர்கள்” என்றும், மேலும், “பழங்காலத்து சர்ச் ஆப் காட் சபையே! இதனோடு ஏதும்செய்ய உங்களுக்கு ஒன்றும் இல்லை. நாங்கள் தான் அதை பெற்றிருக்கிறோம்” என்றும், சர்ச் ஆப் காட் சபையினரோ, “கர்த்தருக்கு ஸ்தோத்திரம், நாங்களே அதை பெற்றிருக்கிறோம்; ஏனெனில், நாங்கள் தீர்க்கதரிசன பெயரை பெற்றிருக்கிறோம்” என்றும் கூறுகின்றனர். ஒருத்துவக்காரர், “நாங்களே அதை பெற்றிருக்கிறோம்; ஏனெனில், நாங்கள் சரியான விதத்தில் ஞானஸ்நானம் கொடுக்கிறோம். அல்லேலூயா!” என்கிறார்கள். சண்டைக்காரக் குழுவினரே! நீங்கள் மரிக்கும்வரை அங்கேயே அமர்ந்திருக்க தேவன் உங்களை விட்டுவிட்டார். அது மிகவும் சரியாயிருக்கிறது. வேதம், அந்தப் பழைய சண்டைக்காரரெல்லாம் மரிக்கும்வரை அவர்கள் அங்கேயே தங்கிவிட்டதாக கூறுகிறது. ஆமென். அது மிகவும் சரியாயிருக்கிறது. அந்தப் பழைய சண்டைக் காரரெல்லாம் மரிக்கும்வரை அவர் அவர்களை அங்கேயே இருக்கும்படி செய்துவிட்டார். வேதம் அந்தப்படியே கூறுகிறது. அந்த சண்டைக்காரர்கள், தங்களுடைய ஸ்தாபன எல்லைகளில் சண்டையிட்டு, “அந்த குழுவுடன் எந்த ஐக்கியமும் கொள்ளாதீர்கள். அது சேரக்கூடாத கூட்டம் (buzzard roost). இவர்கள் இதை அல்லது அதை சார்ந்தவர்கள்” என்கிறார்கள். இதை உன் தலையில் வைத்திருக்கும்வரை, நீ அங்கே மலையில் மேல் அமர்ந்து பட்டினியில் சாவாய். 28. நாற்பது வருடங்களாக அந்த மக்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று எப்பொழுதாவது நினைத்துப் பார்த்ததுண்டா? நாற்பது நாள் தூரம்கூட இல்லை, ஆனால் தேவன் அவர்களை நாற்பது வருடங்கள் தங்கவைத்தார். வெகு காலத்திற்கு முன், காரியம் அப்படியே இருந்தது. யாரோ ஒருவர் கர்த்தராகிய இயேசுவினுடைய வருகையை குறித்துப் பேசினார். அது முன்பே நிகழ்ந்திருக்க வேண்டிய காரியம் (past due) என்று விசுவாசிக்கிறேன். சபையின் நிமித்தமே அது ஒரு காலதாமதமான காரியமாக (past due) இருப்பதாக நம்புகிறேன். இயேசு அவ்விதமே கூறினார். “நோவாவின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரன் வரும்போதும் நடக்கும்.” நோவாவின் நாட்களில் ஒருவரும் அழியக்கூடாது என்று தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தார். மக்கள் (பேழைக்குள்) வருவதற்காக அவர் காத்துக் கொண்டிருந்தார். இன்றைக்கு சபை ஒன்றாகக்கூடி வருவதற்காக அவர் காத்துக் கொண்டிருக்கிறார். இது பிரபலமாய் இல்லை என்று எனக்கு தெரியும். இது ஜனங்கள் மத்தியில் பிரபலமாய் இருக்காது; ஆனால் சகோதரனே, ஒன்றுகூடி வருவதற்கான இந்த மணி நேரத்துக்குரிய செய்தியே அது. ஆத்துமாக்கள் ஒன்றாக கூட வேண்டும். மெதொடிஸ்ட், பாப்டிஸ்ட், பிரஸ்பிடேரியன், லுத்தரன்கள், ஒருத்துவம், திரித்துவம், ஐந்துத்துவம், நாமெல்லாரும் ஒன்று கூடி, ஜீவிக்கின்ற தேவனுடைய சபையாக இருக்க வேண்டும். நாம் ஒரே குழுவாயிருக்கிறோம். பிறப்பின் மூலம் நாம் தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிறோம். அது மிகவும் சரியாய் இருக்கிறது. 29. “பிதாவானவர் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்.” தேங்காயை தொட முடியாதளவிற்கு உயரமாக வேலியமைக்கப் பட்டிருக்கும் போது, எப்படி நீங்கள் வரப் போகிறீர்கள்? பாருங்கள். அநேகர், “நீங்கள் இதை செய்ய வேண்டும் அல்லது அதை செய்ய வேண்டும்” என்கின்றனர். பிலிப்பி பட்டணத்தைச் சார்ந்த சிறை அதிகாரி, “இரட்சிக்கப்பட நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டதைப் போல.. நாம் என்ன செய்வோம்? எதைச் செய்யக் கூடாது என்று அவனிடம் சொல்லுவோம். “நீ இதை செய்வதை விட்டுவிட வேண்டும், அங்கே போவதை நிறுத்த வேண்டும், நீ இதை விட்டுவிட (நிறுத்த) வேண்டும்” என்பதாகக் கூறுவோம். தான் எதை விட்டுவிட வேண்டும் என்று அவன் கேட்கவில்லை. நான் இரட்சிக்கப்பட என்ன செய்ய வேண்டும் என்றே அவன் கேட்டான். சரியா! பவுல் அவனிடம் புரியாத வார்த்தைகளை கூறவில்லை . அவன், “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது இரட்சிக்கப்படுவாய்” என்று கூறினான். அவ்வளவுதான். தேவனுடைய விசுவாசத்தை ஜனங்களிடத்தில் திரும்ப கொண்டுவர வேண்டும், அதன் மூலம் அவர்கள், தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிந்து கொள்ளுவார்கள். மாறாக, “இங்கே வந்து எங்கள் குழுவுடன் இணைந்து கொள்ளுங்கள் அல்லது அங்கே சென்று அந்த குழுவுடன் இணைந்து கொள்ளுங்கள்” என்று கூறவேண்டாம். அவர்களை திரும்ப தேவனிடத்தில் கொண்டு வாருங்கள், மற்ற எல்லாவற்றையும் தேவன் பார்த்துக்கொள்வார். தேவனுடைய ராஜ்யத்திற்குள்ளாக அவர்களைக் கொண்டு வாருங்கள். 30. “அந்த இரண்டு மனிதர்களையும் அவர்கள் நம்ப மறுத்த காரணத்தினால்...” என்று வேதம் கூறுகிறது. யோசுவாவும் காலேபும் அந்தக் கூட்டத்தை அமைதிப்படுத்தினர். இப்பொழுது, பத்து வருடங்களுக்கு முன்பாக, பெந்தெகொஸ்தே மற்றும் பல்வேறு வகையான அமைப்புகளை அறிமுகப்படுத்த விரும்பினபோது; ஒருவர், “நல்லது, இப்பொழுது நாங்கள் இந்த பெரிய குழுவுடன் செல்வோம். மேலும், நாங்கள் பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்படப் போகிறோம்” என்று கூறுகிறார். வேறுசிலர், “பரிசுத்த ஆவியானவர் எங்களை வழிநடத்துவாராக” என்று கூறுகின்றனர். நல்லது, சில புதிய தொல்லைகளும், வேறுபட்ட காரியங்களும் உள்ளே வருகின்றன. அது தேவனுடையதாய் இல்லாவிட்டால், என்னவாயினும் அது விழுந்துபோகும். ஆகவே, அவர்களை தொடர்ந்து செல்ல அனுமதித்து, நாம் ஒருவரையொருவர் நேசிப்போம். ஒருவருக்கொருவர் சண்டையிடாதிருங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடும்படி பிசாசு செய்திருக்கும்வரை, அவனுக்கு எந்த சண்டையும் இல்லை. அவன் வெறுமனே உங்களுக்கு பின்னாக இருந்து, நீங்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதை காண ஒரு சுற்றுலாவை கொண்டிருந்தவனாக, ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டு, பரிசுத்த ஆவியை பெற்றிருப்பதாக அறிக்கையிடுகிற உங்களைப் பார்த்து நகைப்பான். 31. ஒருவரையொருவர் நேசியுங்கள். இயேசு “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பு கூறும்போது, அதினால் என்னுடைய சீஷர்கள் என்று அறிந்து கொள்வார்கள்” என்றார். நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பை பெற்றிருக்கும் போது தான், அவருடைய சீஷர்கள் என்று எல்லா மனிதரும் அறிந்து கொள்வார்கள் - நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கும் போது; அதுவே எனக்கு தெரிந்தவரையில், பரிசுத்த ஆவியின் மிகப்பெரிய அத்தாட்சியாயிருக்கிறது. அது மகத்தான கட்டளை. அது மகத்தான காரியம். நீங்கள் மனுஷர் பாஷைகளை பேசினாலும், தூதர் பாஷைகளைபேசினாலும், அன்பில்லை யென்றால் அதினால் பயன் ஒன்றுமில்லை. பாருங்கள், நீங்கள் பெற்றிருக்கும் பரிசுத்த ஆவியின் அத்தாட்சி மீது எதையும் ஸ்தாபிக்க வேண்டாம். அந்த அத்தாட்சி சரியாய் இருக்கிறதென்று நானும் விசுவாசிக்கிறேன். ஆனால் பொறுத்திருங்கள். அதைக்காட்டிலும் அதிகமாக அங்கே இருக்கிறது. தெற்குப்பாகத்தில் தர்பூசணி சாப்பிட்டுக் கொண்டிருந்த நீக்ரோ மனிதனுக்கு (என்னுடைய கருப்பின நண்பர்களே, என்னை மன்னியுங்கள்) இதுபோல ஒரு சிறிய துண்டை சாப்பிட கொடுத்தார்கள். அந்த பையனால் அதைக் காட்டிலும் அதிகமாக தர்பூசணி சாப்பிட முடியும். “சாம்போ , அது எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்கள். அதற்கு சாம்போ, “அது அருமையாயுள்ளது. ஆனால் அங்கே இன்னும் நிறைய இருக்கிறது” என்றான். 32. பரிசுத்த ஆவியானவர் கூட்டத்தில் அசைவாடும் போது, அந்தவிதமாகவே நான் தேவனின் சுவையை பெறுகிறேன். அது நல்லது, ஆனால் அதைக்காட்டிலும் அதிகமாகப் பெற விரும்புகிறேன். அங்கே அதிகமாக உள்ளது. ஏனென்றால், ஒவ்வொரு மீட்பின் ஆசீர்வாதங்களும் நம்முடையதாய் இருக்கிறது என்று அவர் வாக்குத்தத்தம் பண்ணினார், ஆம் ஐயா! அவர்கள் நாற்பது வருடங்களாக மலையில் தங்கினார்கள். நாம் இந்த வழியாகவும், அந்த வழியாகவும் குழப்பிக் கொண்டு நாற்பது வருடங்களாக நம்முடைய ஸ்தாபனங்களில் தங்கி விட்டோம். நாற்பது வருடங்களாக அந்த மக்கள் என்ன செய்தார்கள் என்பதை நீங்கள் எப்பொழுதாவது நினைத்ததுண்டா? நல்லது, நிச்சயமாக தேவன் அவர்களுடன் இருந்தார். அவர் நம்முடனும் இருந்தார். அவர்கள் நாற்பது வருடங்களாக அங்கேயிருந்து பிள்ளைகளை வளர்த்தார்கள். தேவன் அவர்களை செழிக்க செய்தார். அவர்கள் நல்ல பயிர்களை பெற்றார்கள். அங்கே அவர்கள் நிறைய நல்ல காரியங்களை செய்தார்கள். தேவன் அவர்களுடைய வியாதிகளை குணமாக்கி அவர்களை ஆசீர்வதித்தார். வனாந்திரத்திலிருந்து வெளியே வந்தபோது அவர்களில் பலவீனப்பட்டவன் ஒருவனுமில்லை . ஆனாலும் அந்தப் பழைய சண்டைக்காரக் கூட்டம் எல்லாரும் மரிக்கும் வரை தேவன் அவர்களை அங்கேயே தங்கியிருக்கும்படி விட்டுவிட்டார். 33. இன்றைக்கும் சரியாக அதைத்தான் செய்திருக்கிறார். அங்கேயே அமர்ந்திருக்கச் செய்து, அசெம்பிளி ஆப் காட்-ஐ சேர்ந்து, சர்ச் ஆப் காட்-ஐ சேர்ந்து, இதைச் சேர்ந்து, அதைச் சேர்ந்து, சேர்ந்து, சேர்ந்து, சேர்ந்து.. ஓ, நாம் இங்கேயே அமர்ந்திருக்கும் வரை, பிள்ளைகளை வளர்த்து, காடிலாக் சொகுசுக் கார்களை வாங்கி, நம்முடைய வியாபாரங்களையும், மற்ற எல்லாவற்றையும் செழிக்கச் செய்தார். ஆனால், நாற்பது வருடங்களின் முடிவு வந்துவிட்டது சகோதரனே! ஒரு புதிய தலைமுறை எழும்பியிருக்கிறது. அது சரி. ஒரு நாள் யோசுவா என்பவன் அங்கே எழும்பினான். அவன் தேவனுடைய வார்த்தையை முற்றிலுமாக விசுவாசித்தான். வாக்குத்தத்தத்தின் ஒவ்வொரு துளியையும் - உன்னை பாதுகாக்கவும், உன் வியாபாரங்கள் செழிக்கசெய்வது போன்றவைகளை மட்டுமல்ல, ஆனால் அதைக்காட்டிலும் அதிகமாக அங்கே இருக்கிறது என்று அவன் விசுவாசித்தான். இன்றைக்கும் தேவன் அதே காரியங்களை செய்திருக்கிறார். இந்த முழு வியாபாரிகள் சங்கம் தேவனுடைய திட்டத்தில் ஒரு பாகமாக இருக்கிறதென்று நான் விசுவாசிக்கிறேன். அவர்களுக்கு முன்பாக நிற்கின்ற காரணத்தினால் நான் இதைச் சொல்லவில்லை. அப்படிச் செய்தால் நான் ஒரு மாய்மாலகாரனாயிருப்பேன். 34. ஆனால் அவர்கள் எல்லாரும் உள்ளே வரும்படி தங்கள் எல்லைகளை விரிவாக்கி, அந்த அமைப்பு, இந்த அமைப்பு என்று சொல்லி தங்கள் பங்குகளை அவர்கள் அதில் போடாத காரணத்தால் அப்படி சொல்கிறேன். அவர்கள் சரியான திட்ட அமைப்பில் இருக்கிறார்கள் என்று நான் விசுவாசிக்கின்ற காரணத்தினால், அவர்களில் ஒரு பாகமாக நான் இருக்கிறேன். இச்சங்கத்தின் கரம், ‘அசெம்பிளி ஆப் காட்’ சபைக்கும், 'சர்ச் ஆப் காட்' சபைக்கும், 'போர்ஸ்கொயர்' (Foursquare) சபைக்கும், ‘பெந்தெகொஸ்தே அசெம்பிளீஸ் ஆப் ஜீசஸ் கிரைஸ்ட்' (P.A.J.C) சபைக்கும், உலக பெந்தெகொஸ்தே அசெம்பிளி (P.A. of W.) சபைக்கும், 'யுனைடெட்' சபைகளுக்கும் மற்றும் எல்லாருக்கும் நீட்டப்பட்டு இருக்கிறது. விருப்பமுள்ளவன் வந்து இலவசமாய் தேவனுடைய ஜீவ ஊற்றின் தண்ணீரைப் பருகக்கடவன். நீங்கள் ஒன்று, இரண்டு, மூன்று அல்லது எத்தனை திமில் கொண்ட ஒட்டகத்தின் மீது சவாரி செய்தாலும், கழுதையின் மீது சவாரி செய்தாலும், அது எந்த ஒரு வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. இந்த வீட்டில் நம் அனைவருக்கும் உணவு இருக்கிறது. நாம் ஒன்றாக கூடி வரும்போது, நான் என்ன விசுவாசிக்கிறேன் என்பதை தெரியப்படுத்த, அங்கு செய்தியைக் கொண்டு சென்று எல்லா குழுக்களையும் சந்திக்க முடிகின்ற காரணத்தினால், நான் வியாபாரிகள் சங்கத்தை பின் தொடர்கிறேன். 35. இந்நாளிலும் கூட காரியம் அந்தவிதமாகவே இருக்கிறது என்று நான் நம்புகிறேன். அவர்கள் அதின் ஒரு பாகமாக இருக்க வேண்டும். தங்களுடைய ஸ்தாபன தடைகளை உடைத்து, மனிதர்கள் ஒன்று கூடி வரும்போது தேவனால் என்ன செய்ய முடியும் என்பதற்கு இவர்கள் ஒரு உதாரணமாக இருக்கிறார்கள். நீங்கள் இங்கே காண்கிற இந்த மனிதர்கள், இந்த இளைஞர்கள், இவர்கள் எந்த குழுவைச் சார்ந்தவர்கள்? இது, அந்த பழைய சண்டைக்காரர்களின் அடுத்த தலைமுறையைக் (sons of) கொண்ட குழுவாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன். இந்த மக்கள் சண்டைக்காரர்கள் அல்ல. இந்த புதிய குழுவானது ஒரு சண்டைக்காரக் குழு அல்ல. அவர், எல்லா பழைய சண்டைக்காரர்களையும் மரிக்கும்படி செய்கிறார். பழைய சண்டைக்காரர்கள் மரித்த பின்பு, அவர்களுடைய குமாரர்களை அவர் எடுத்து, அவர்களிலிருந்து யோசுவாவை எழுப்பி, முழு வாக்குத்தத்தத்தையும் அடையும்படிக்கு அவர்களை அனுப்புகிறார். அதைத்தான் இன்றைக்கும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று நம்புகிறேன். அதைத்தான் இந்த கிறிஸ்தவ வியாபாரிகள் சங்கமும் செய்து கொண்டிருக்கிறது என்று நான் நம்புகிறேன். தேவன் இதை வல்லமையாக உபயோகித்துக் கொண்டிருக்கிறார். அவர்கள் ஸ்தாபனத் தடைகளை தகர்க்கும் வரை, அவர் அவர்களை வல்லமையாக உபயோகிப்பார். நீங்கள் இன்ன சபையை சேரவேண்டுமென்று அவர்கள் வலியுறுத்துவதில்லை, நீங்கள் எந்த சபையை வேண்டுமானாலும் சார்ந்திருக்கலாம். ஆனால் அவர்கள் அந்த பழைய சண்டைக்காரருடைய மனப்பான்மையிலிருந்து விலகி, எந்த சகோதரன் மேலும் தங்கள் கரங்களைக் கொண்டு அரவணைக்கும் நிலைக்கு அவர்களை திரும்ப வேண்டுமென்று முயற்சிக்கிறார்கள். அது மெதொடிஸ்ட், பாப்டிஸ்ட், பிரஸ்பிடேரியன், ஒருத்துவம், திருத்துவம் அல்லது என்னவானாலும், தங்கள் கரங்களால் அவனை அரவணைக்கிறார்கள். அவன் ஒரு சகோதரன். அவனுடன் சண்டையிடாதிருங்கள். அவனை நேசியுங்கள், ஆமென். இந்த அணுகுமுறையை நாம் காத்துக்கொண்டிருக்கும் வரை, தேவன் இந்நாட்களில் ஒன்றில் அறுவடையை செய்யப் போகிறார். நாம் இப்பொழுது அவருடைய பாதத்தில் இருக்கிறோம் என்று விசுவாசிக்கிறோம். 36. நாற்பது வருடங்களாக நாம் ஸ்தாபனம் எனும் மலைநாட்டில் இருந்துவிட்டோம். இங்கிருந்து வெளியேறி, தொடர்ந்து முன்னேறிச் செல்வோம். ஊழியக்காரர்களே, அங்கே இருக்கும் என் ஊழியக்கார சகோதரர்களே, நீண்டகாலமாக நாம் இந்த மலையின் மேலேயே தங்கிவிட்டோம் என்று நீங்கள் நினைக்கவில்லையா? நீண்டகாலமாக நாம் வம்பிழுத்துக் கொண்டும், சண்டையிட்டுக்கொண்டும், நம்முடைய ஸ்தாபன எல்லைகளில் குழப்பிக் கொண்டிருந்தோம் என்றும் நினைக்கவில்லையா? இந்த மலையிலிருந்து வெளியேறி, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு செல்வோம். நாம் மேலே சென்று, தேசத்தை சுதந்தரிப்போம். தேவன் அவர்களிடம், “போய் தேசத்தை சுதந்தரித்துக் கொள்ளுங்கள். இப்பொழுது எல்லா பழைய சண்டைக்காரர்களும் போய்விட்டார்கள். உங்கள் பட்டயத்தை அதினுடைய உறையில் போடுங்கள், சண்டையிடாதிருங்கள்” என்றார். 37. கவனியுங்கள், மனிதர்களே, உங்கள் பிதாக்கள் செய்த அதே தவறை நீங்கள் செய்யாதீர்கள், இல்லையென்றால் நாற்பது வருடத்திற்கும் அதிகமாக நீங்கள் இங்கேயே இருப்பீர்கள். பாருங்கள், கிறிஸ்தவ மனிதர்களுடைய அமைப்புகள் அல்லது அது போன்றவைகள்...... நீங்கள் அதை ஸ்தாபனமாக்கிக் கொண்டால், இன்னொரு நாற்பது வருடங்கள் நீங்கள் இங்கேயே தங்க நேரிடும். ஆனால் இது, தேவன் அவருடைய சபையை மேலே அழைக்கும் நேரமாயுள்ளது. நான் அதை விசுவாசிக்கிறேன், கவனியுங்கள். அவர், “இப்பொழுது நீங்கள் சேயீர் மலை வழியாய் போகும் பொழுது..” என்றார். இப்பொழுது அங்கே உங்கள் ஸ்தாபன சகோதரன் ஏசா அமர்ந்திருப்பான். (ஒரு நல்ல பிரஸ்பிடேரியனோ, மெதொடிஸ்டோ அல்லது பாப்டிஸ்டோ). இப்பொழுது அவனை தொல்லைப்படுத்தாதீர்கள். அவனுடன் வம்பு செய்யாதீர்கள். “எப்படி இருக்கிறாய் சகோதரனே?” என்று சொல்லி கடந்து செல்லுங்கள். ஆனால் நீங்கள் அவனைப் பிடித்து அசைத்து, அவனுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்று சொல்ல விரும்புகிறவர்களாய் இருந்தீர்கள். அது சரி. ஞாபகங்கொள்ளுங்கள், தேவன் அவனுக்கு கொடுத்ததை அவன் பெற்றிருக்கிறான். நீங்கள் பெற்ற அதே எழுப்புதலில் இருந்துதான் அவனும் வெளியே வருகிறான், சரி. 38. அவர் யோசுவாவிடம், “சேயீர் மலை வழியாக கவனமாக செல்லவேண்டும், ஏனெனில் நான் அதை ஏசாவுக்கு கொடுத்தேன்” என்று கூறினார். அவன் (ஏசா) போகக்கூடிய தூரம் அவ்வளவே. அவ்வளவுதான் அவன் அறிந்தது. அவன் அறிந்த ஒரே காரியம் அவனுடைய ஸ்தாபனம் மாத்திரமே. “நாங்கள் இன்னார்... இன்னார்... நாங்கள்...” அவ்வளவுதான் அவன் அறிந்தது. அது மட்டும் தான் தேவன் அவனுக்கு கொடுத்தது. இப்பொழுது அதைக் கடந்து செல். அவனுடன் சண்டையிட்டு வம்பு செய்யாதே, அமைதியாகக் கடந்து செல். ஆனால், இங்கே கவனி யாக்கோபே, பெந்தெகொஸ்தே யாக்கோபே, நீ மறுபடியும் பிறந்து, பரிசுத்த ஆவியினால் நடத்தப்படுகிற அனுபவத்தை பெற்றிருக்கிறாய். நீ அவனுடன் (ஏசாவுடன்) வம்பிழுக்கப் போகாதே. ஆனால் பெந்தெகொஸ்தே யாக்கோபு, தேசத்தில் நிறைவேறப் போகிற முழு வாக்குத்தத்தத்தையும் உடையவனாயிருக்கிறான். தேவன், “ஒவ்வொரு செயல் பாட்டுடனும், ஆவியின் முழு நிறைவுடனும், உன்னை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் வைக்கிறேன்” என்றார். 39. மற்றொரு காலையில் அந்தக் கூட்டத்தில் நான் நின்றுகொண்டிருந்த போது, 'என்னுடைய ஊழியம் ஒரு ஆவிக்குரிய ஊழியமாயிருக்கிறது என்றும், மற்ற போதகர்களைப் போல நான் இல்லை' என்பதையும் கண்டுகொண்டேன். ஆனால் கவனியுங்கள், அந்த வரிசையில் அவர்கள், சார்லஸ் பிரைஸ் அவர்கள் மரித்துக் கொண்டிருப்பதைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோதும், சகோ. ஷகாரியன் அவர்கள் நிறைவேறப் போகிற காரியங்களைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்துக் கொண்டிருந்தபோதும், ஓ, என்னுடைய ஆவி எனக்குள்ளாக எழும்பி, “இதுதான் அது, இதுதான் அது, இதுதான் அது. அவர்கள் மாத்திரம் இதை காண முடிந்தால், இதுதான் அது” என்றது. நாம் மேலே சென்று தேசத்தைச் சுதந்தரிக்க ஆயத்தமாயிருக்கிறோம். நான் இந்த மருத்துவமனைகளைக் குறித்தும் மற்றவைகளைக் குறித்தும் என்ன சொன்னேன் என்பதை ஞாபகங்கொள்ளுங்கள். அந்தப் பழைய சண்டைக்காரருடைய அடுத்த தலைமுறைகள் எல்லோரும் ஒன்று கூடும் போது நாம் இதை செய்ய ஆயத்தமாக இருக்கிறோம். ஓ, இங்கே இருக்கிற ஊழியக்காரர்களே, ஃபீனிக்ஸில் இருக்கிற சகோதரரே, உங்கள் ஸ்தாபனத் தடைகளை உடைத்துப் போடுங்கள். மனந்திரும்பி ஒரு பெந்தெகொஸ்தே எழுப்புதலைப் பெற்றுக்கொள்ளுங்கள்! நாம் அனைவரும் ஒன்று சேரலாம்....?... பரிசுத்த ஆவியானவர் சபையின் மேல் விழுந்து, பரிசுத்த ஆவியினால் நடத்தப்படுகிற ஒரு எழுப்புதல் நமக்கு தேவையாயிருக்கிறது. தேவன் அதை செய்ய சித்தமுள்ளவராயிருக்கிறார். முன்னேறிப் போய், தேசத்தைச் சுதந்தரித்துக் கொள்ளுங்கள். அவர்களைக் கடந்து செல்லுங்கள். அவர்களுடன் சண்டையிடாதீர்கள். அவர்களுக்கு வர விருப்பமில்லை யென்றால், பரவாயில்லை. அது பரவாயில்லை. “எப்படியிருக்கிறாய் சகோதரனே?” என்று சொல்லிக் கடந்து முன்னேறிச் செல்லுங்கள். அவன் எல்லைகோட்டு விசுவாசியாயிருக்கிறான். ஒரு எல்லை வரைக்கும் வருவது, அவ்வளவுதான் அவன் அறிந்தது. அந்த வழியில்தான் அநேக மக்கள் இன்றைக்கு இருக்கிறார்கள். அவர்கள் அறிந்தது எல்லாம் அவர்கள் ஸ்தாபனம் மாத்திரமே. “நான் இதை சேர்ந்தவன், நான் அதை சேர்ந்தவன்” என்பது மட்டுமே. 40. ஒரு முறை ஒரு பெண்ணைப் பார்த்து நீ கிறிஸ்தவளா? என்று கேட்டேன். அவளோ, “நான் ஒவ்வொரு இரவும் மெழுகுவர்த்தி ஏற்றுகிறேன்” என்றாள். ஏதாவது இது போன்று செய்யப்படுவதுதான் கிறிஸ்தவம் என்று எனக்கு புரியவைக்க முயற்சித்தாள். `மற்றொரு மனிதன், “நான் அமெரிக்கன், நான் உறுதியான அமெரிக்கன்” என்று சொல்வதை நான் கேட்டேன். ஒரு பன்றிக்கு பக்கவாட்டுச் சேணம் தேவை என்பதை காட்டிலும் அதில் வேறொன்றுமே இல்லை. ஒரு பன்றியின் மேல் பக்கவாட்டுச் சேணம் போடுவதைவிட அது அர்த்தமற்றதாயிருக்கிறது. ஏன்? அமெரிக்கா என்றால் கிறிஸ்தவம் என்று அர்த்தமல்ல. கிறிஸ்தவம் என்பது மறுபடியும் பிறந்த அனுபவமாக இருக்கிறது. சகிப்புத்தன்மை, அன்பு, ஐக்கியத்தைப் பெற, அது பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானமாயிருக்கிறது. பரிசுத்த ஆவி சபையை கட்டுக்குள் எடுத்துக்கொண்டு பெரிய காரியங்களைச் செய்கிறார். ஓ! நிச்சயமாக, ஆம் ஐயா! என்னை சுற்றிலும் ஏதோ நடப்பதைப் போல் உணர்ந்தேன். அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. நான் இன்னும் போகவில்லையோ என்று நிச்சயமில்லாதவனாக இருந்தேன்... இப்பொழுது யாரோ பெட்டியை நகர்த்துகிறார்கள். இந்தப் புறமாக செல்லலாம் என நினைத்தேன்.. ஆம் ஐயா! 41. வாக்குத்தத்தங்களைச் சுதந்தரித்துக் கொள்ளுங்கள். ‘வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது.' கிறிஸ்தவர்களே, சகோதரர்களே, சகோதரிகளே, நாம் போதுமான அளவு இந்த இடத்தில் இருந்து விட்டோம். நாம் இந்த மலைநாட்டை சுற்றியே இருந்துவிட்டோம். இந்த ஸ்தாபன மலைநாட்டிலேயே நீண்டகாலமாக தங்கிவிட்டோம். அந்நிய பாஷையில் பேசுதல் என்ற அத்தாட்சியை பயன்படுத்தி நாற்பது வருடங்களாக இங்கேயே இருந்துவிட்டோம். ஓ, என்னே! அறியப்படாத வல்லமைகள் அங்கே இருக்கும்போது, பயன்படுத்தப்படாத வளங்கள் அங்கே இருக்கின்ற நிலையில், “என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன். நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக் கொள்வதெதுவோ அதை நான் செய்வேன்.” ஆமென். தெய்வீக சுகமளித்தலும், அந்நிய பாஷையில் பேசுவதும், அந்த தேசத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட சில திராட்சைப் பழங்களேயன்றி அது வேறொன்றுமில்லை. அந்த தேசமே நம்முடையதாயிருக்கிறது. அவை அனைத்தும் நமக்கு சொந்தமானது. அங்கேயிருக்கிற மற்றவர்கள் உங்களை மேற்கொள்வார்கள் என்று பயப்படாதிருங்கள். வெறுமனே அவனுடன் (யோசுவா) சேர்ந்து தொடர்ந்து முன்னேறுங்கள். அதை செய்வதற்கான வழி இதுவே. நாற்பது வருடங்களாக இந்த மலைநாட்டிலேயே இருந்துவிட்டோம். இதை விட்டு வெளியேறி வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை நோக்கி முன்னேறிச் செல்வோம். 42. இந்த வியாபாரிகள் தங்களுடைய இருதயங்களை ஒருநிலைப்படுத்த தேவன் உதவி செய்ய வேண்டும் என்பதே என்னுடைய ஜெபமாயிருக்கிறது. அது சரியே. ஊழியக்காரர்கள் அதை செய்யவில்லையென்றால், அவர்களை ஒன்று சேர்க்க, தேவன் வியாபாரிகளையோ அல்லது வேறு ஏதாவதொன்றை எழுப்பி அதை செய்ய வைப்பார். ஏனெனில், சபையானது கைகளை ஒரு இடத்திற்கும், தலையை மற்றொரு இடத்திற்கும், கால்களை வேறொரு இடத்திற்கும் கொண்டுசெல்ல முடியாது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் முழு சரீரமும் தேவனுடைய மகத்தான ஒரே சேனையாக (unit) நிற்கும்வரை, அவன் தீர்க்கதரிசனங்களையும், ஒன்று கூடி வரும் சத்தத்தையும் பெற்றவனாய் இருக்க வேண்டும் (இவ்வளவு தான் என்னால் கூறமுடியும்). அதன்பின் நாம் இந்த மலையை விட்டு விலகி தொடர்ந்து சென்று, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை சுதந்தரிப்போம். அதுவரை நான், அந்த ஒரு நோக்கத்திற்காக மாத்திரம் போராடுகிற ஒரு சகோதரனாகவே இருக்கிறேன். அதாவது, ஜீவனுள்ள தேவனுடைய சபையை, இருதயங்கள் |ஒருநிலைப்பட்டவர்களாகவும், ஒருமனப்பட்டவர்களாகவும் ஒன்று கூட்டும் நோக்கத்திற்காகவே போராடுகிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரன் ஷகாரியான்.... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி). (ஒலிநாடாவில் மீதிப் பகுதி ஆராதனையின் வேறொரு பாகமாக காணப்படுகிறது. வேறொரு சகோதரன் பேசுகிறார் - ஆசி). 43. நம்மால் முடிந்தளவு உத்தமமாக இருக்கிறோம், இருப்பினும் சில நேரங்களில், அசலான தேவனுடைய வல்லமையானது, எந்தளவிற்கு மகத்தானதாய் நம் மத்தியில் இருக்கிறதோ, அவ்வளவாய் நாம் அதைக் காணத் தவறிவிடுகிறோம். நம்முடைய (இந்த) ஆராதனையிலும் அவ்விதமே இருக்கலாம் என்று நினைக்கிறேன். இப்பொழுது, அந்த தரிசனம் வந்தபொழுது, உங்களில் அநேகர், ஒருவேளை இங்கிருக்கும் எல்லோருமே அந்தக் கூட்டங்களில் இருந்திருப்பீர்கள். என்ன சம்பவிக்கப் போகிறது என்பதை அறிய தரிசனங்களைக் காண்கிறோம். கர்த்தருடைய பிரசன்னத்தை நீங்கள் மாத்திரம் அறிந்துகொள்ளக் கூடுமானால்... இதன் காரணமாகவே நான் இந்தக் காலையில் அந்த கருத்தை பதிவு செய்தேன். அந்த ஒளியை அவர்கள் அநேக முறைகள் புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். அது தேவனாயிருக்கிறது, ஏனெனில் அது அதே தன்மையை (nature) கொண்டு வருகிறது. 44. சில நாட்களுக்கு முன்பு இங்கே அரிசோனாவில் ஒரு சிட்ரஸ் வகை பழ மரத்தைக் கண்டேன், அது பல்வேறு வகையான பழங்களைக் கொண்டிருந்தது என்று நினைக்கிறேன். ஒருவேளை அது ஆரஞ்சு மரமாக இருக்கலாம்; அதில் எலுமிச்சை மற்றும் பப்பளிமாஸ் (citrus grapefruit) ஆகியவை வளர்ந்திருந்தது. அந்த மரத்தில் அவைகள் வளரும். ஆனால் பரிசுத்த யோவான் 5:15-ல் என நம்புகிறேன், இயேசு “நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள்” என்று சொன்னார். (யோவான் 15:5 - ஆசி). நல்லது, இந்த திராட்சைச்செடியானது தன்னுடைய முதல் கிளையை கொண்டு வந்தபோது, அவர்கள் அந்த கிளைக்குப் பின்னால் ஒரு அப்போஸ்தல நடபடிகள் புஸ்தகத்தை எழுதினார்கள். அந்த மெய்யான திராட்சைச்செடி மற்றொரு கிளையை கொண்டு வருமானால், அதற்கு பின்னால் அது வேறொரு நடபடிகள் புஸ்தகத்தை எழுதும். பாருங்கள், ஏனெனில் இப்பொழுது அங்கே ஒட்டு போடுதல் இருக்கிறது. நீங்கள் மற்ற சிட்ரஸ் பழங்களையும் கூட ஒட்டு போடலாம், அவைகள் அந்த மரத்தின் ஜீவனை கொண்டு வாழும். 45. இப்பொழுது, ஸ்தாபன அமைப்புகளை சிறுமைப் படுத்தும் நோக்கில் இதை நான் கூறவில்லை, ஆனால் இன்று, பெரும்பாலான நேரங்களில் நாம் ஒரு காரியத்துக்கு) முற்றுப்புள்ளி வைத்து நிறுத்தி விடுகிறோம் என்று நினைக்கிறேன். நீங்கள் பாருங்கள், “நாங்கள் இதை விசுவாசிக்கிறோம் அவ்வளவு தான்”. நாம் அதை ஒரு காற்புள்ளியுடன் முடித்தால், “நாங்கள் இதை விசுவாசிக்கிறோம், அதனோடு தேவன் எங்களுக்கு எதைக் காண்பிக்கிறாரோ, அதையும் விசுவாசிப்போம்” என்பதாக இருக்கும். பாருங்கள், உங்களுடைய ஸ்தாபனத்துக்கு அது வித்தியாசமானதாக தென்படலாம். ஆனால் நீங்கள் அதை காற்புள்ளியுடன் முடிக்கும்பொழுது அதனுடன் (தேவன் காண்பிப்பதைத் தவிர) வேறொன்றையும் சேர்க்க முடியாது. அந்த மரமானது தொடர்ந்து வளரும் போது, சபையானது அல்லது எந்த ஒரு சபை ஸ்தாபனமும் கூட உண்மையாகவே கிறிஸ்துவின் ஜீவனை கொண்டு செழித்து வளருகிறது என்று நான் நினைக்கிறேன். நான் அதை விசுவாசிக்கிறேன். ஏனெனில் அங்கு ஏதோ ஒன்று ஒட்டுபோடப்பட்டோ அல்லது சேர்க்கப்பட்டோ இருக்கிறது. அது சபை உறுப்பினர்களிடமிருந்து அதிகாரத்தை எடுத்து ஒரு ஊழியக்காரன் மீதோ அல்லது பாதிரியார் மீதோ அல்லது வேறேதோவொன்றின் மீதோ வைக்கிறது. வெளிப்படுத்தின விசேஷத்தில் உள்ளது போல, “நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகள்” - “நிக்கோ” என்பது “மேற்கொள்ளுதல்,” சபையை மேற்கொள்ளுதல் என்பதாய் இருக்கிறது. இதைப்போன்ற கூட்டங்களானது, தேவன் சபையின் மூலமாக கிரியை செய்யம்படி அவருக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது என்று நினைக்கிறேன். பாருங்கள், தேவனுடைய வல்லமை சபையின் மூலமாக கிரியை செய்கிறது. 46. இப்பொழுது, 1933-ம் வருடத்தில், நான் ஒரு மிஷனரி பாப்டிஸ்ட் ஊழியக்காரனாயிருந்தேன். இப்பொழுது எனக்கு ஐம்பத்தொரு வயதாகிறது, நான் ஆயிரக்கணக்கான தரிசனங்களைக் கண்டிருக்கிறேன், இங்கே இருக்கிற உங்களில் அநேகர் அந்த கூட்டங்களில் இருந்திருக்கிறீர்கள். அவற்றில் ஏதாவதொன்று எப்பொழுதாவது தவறியிருக்கிறதா என்று யாராவது ஒருவரை கேட்டுப்பாருங்கள். அது ஒருபோதும் தவறினதில்லை . அது தவறிப்போக முடியாது. அது தேவனாயிருக்கிறது. இப்பொழுது, இது சபைக்கு ஒரு புதுமையானதைப் போல இருப்பதாகக் காண்கிறோம். இங்கே நாம் (வழக்கமாக) காண்கிற விதத்திற்கு புதுமையானதாக, பரிசுத்த ஆவியின் வல்லமையானது இன்றைக்கு சபையில் காணப்படுகிறது. (பாப்டிஸ்டு மற்றும் மை பிரதரன் அசெம்பிளி (my brethren) சகோதரர்கள், மற்றும் ஏனைய சகோதரர்கள் இங்கிருந்து அதை சோதித்தறிகிறதை கவனிக்க முடிகிறது). இது சபைக்கு புதிதாக இருப்பதாகக் காண்கிறோம். ஆனால் அது என்னவாயிருக்கிறது: அது அந்த திராட்சைச் செடியிலிருந்து வருகிற வேறொரு கிளையாயிருக்கிறது. நீங்கள் அதை கவனிப்பீர்களானால், அது, அப்போஸ்தலர் நடபடிகளில் எப்படி பரிசுத்த ஆவியானவர் ஜனங்கள் நடுவில் எழும்பி வித்தியாசமான காரியங்களை பேசினரோ அது போலவே இப்பொழுதும் அது கிரியை செய்கிறது. 47. இன்று காலையில் நான் என்னுடைய சபைக்கு போய்கொண்டிருந்தேன்... ஒரு தரிசனம் என்றால் என்னவென்று கூட அழைக்க தெரியாதவனாயிருந்தேன். ஆனால் நான் இந்த காரியங்களைக் கண்டேன். அது உலகப்போர் தொடங்குவதற்கு அநேக வருடங்களுக்கு முன்பாக, “இப்போது முசோலினி என்ற பெயர் கொண்ட சர்வாதிகாரி இருக்கிறான். அவன் முதன்முதல் எத்தியோப்பியாவின் மேல் படையெடுத்து அதைத் தோற்கடிப்பான், ஆனால் அவன் அவமானகரமான முடிவை அடைவான்” என்றும் சொல்லப்பட்டது. அது (தரிசனம்) பேசின எல்லாவற்றிலும், முக்கியமான ஏழு காரியங்களைக் குறித்து நான் எழுதிவைத்துள்ள அந்த பழைய காகிதத்துண்டை ஒருவேளை நாளை கொண்டு வந்து, நீங்கள் அதைக் காணும்படிச் செய்கிறேன். எப்படியாய் ஐந்து காரியங்கள் பரிபூரணமாய் நிறைவேறியது என்பதை காண்பிக்கிறேன். ஏழாவதானது முன்னறிவிக்கப்பட்டது (predicted). இப்பொழுது, எப்படி அவர்கள் பெண்களுக்கு ஓட்டுப் போடும் உரிமையை அளிப்பார்கள் என்பதைக் குறித்து அது கூறுகிறது. அதற்கெதிராக எனக்கொன்றுமில்லை. (ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி) 48. நம்முடைய தேசமெங்கும் பாறைகள் வெடித்துச் சிதறி, எங்கும் புகைக்காடாக காணப்பட்டது. அதன் பிறகு திரு. ரூஸ்வெல்ட், சரியாக அவருடைய ஆட்சிக் காலத்தில் உலகமானது போருக்குள்ளாகச் சென்றது. சரியாக நாம் கூறினபடியே முசோலினி செய்தான், மேலும் மாஜினோ கோடு (Maginot line) பற்றி சொல்லப்பட்டவை சரியாக நிறைவேறியது. மேலும் தேர்தலைப் பற்றியதான காரியத்தில், அது ஒரு ஸ்திரீயாக இருந்தது, நம்முடைய ஜனாதிபதியை அவர்கள் தேர்ந்தெடுத்தனர். தெற்கத்திய நாட்டில் இருப்பது போல, தெற்கத்தியராக இருந்து “இனப்பாகுபாடு மற்றும் அதைப் போன்றவைகளைக் குறித்து என்ன?” என்று அவர்கள் நிறைய கேட்கிறார்கள். ஒரு அமெரிக்கனாக நான்... அது எதுவாக இருந்தாலும் சரி... ஆகவே இப்பொழுது அது நம்முடைய ஜனாதிபதியாக இருக்கும் பட்சத்தில் நாம் அதற்கு மரியாதை செலுத்த வேண்டும். 49. இப்பொழுது, சில நாட்களுக்கு முன்பு எனக்கு ஒரு காரியம் வெளிப்பட்டது, அதை நான் எழுதிவைத்தேன். யாரோ ஒருவர், “அவர் முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு உண்மையான ஜனாதிபதியாக இருப்பார்” என்றார். அது மிகவும் சரி. (இக்காலையில், கருப்புக் கண்ணாடி அணிந்தவராய் இங்கே உட்கார்ந்து கொண்டிருந்த அந்த பண்புமிக்க மனிதன்தான் அதைச் சொன்னவராயிருப்பார் என நினைக்கிறேன்). ஆனால் நீங்கள் கவனியுங்கள், நாம் நம்முடைய கிருபையின் நாளிலிருந்து விழுந்து பாவம் செய்திருக்கிறோம். நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் காலதாமதமாகிவிட்டது. பாருங்கள், நேரம் மிகவும் சமீபமாயிருக்கிறது. ஞாபகங்கொள்ளுங்கள், முகஸ்துதிகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நாம் இப்பொழுது முடிவு காலத்தை நெருங்கி இருக்கிறோம். நான் அதைக் குறித்து உறுதியாயிருக்கிறேன். நான் உறுதியாயிருக்கிறேன், இருப்பினும்... 50. உங்களில் அநேகர் ஊழியத்தைக் குறித்து அருமையான பாராட்டுகளையும், அதைப் போன்ற காரியங்களையும் தெரிவித்தீர்கள். அது என்னவாக இருக்கிறதோ அது அவ்வாறே இருக்கட்டும். ஆனால், நாங்கள் கர்த்தருடைய நாமத்தினால் பேசுகிறோம் என்று நீங்கள் விசுவாசித்தால், அமெரிக்கா முடிந்துவிட்டது (America is finished). (தான் கண்ட நிறைவேற வேண்டிய ஏழாவது தரிசனத்தைப் பற்றிக் தீர்க்கதரிசி குறிப்பிடுகிறார் - மொழிபெயர்ப்பாளர்) அது சரியாய் இருக்கிறது. கிரியை செய்வதற்கான நேரம் என்ற ஒன்று இருக்குமானால், நாங்கள் இப்பொழுதே அதை செய்ய போகிறோம், சரியாக இப்பொழுதே. “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்.” நாங்கள் உண்மையாகவே கடினமாகவும் வேகமாகவும் வலைவீச துவங்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். இப்பொழுது, வேறொருவருடைய நேரத்தை எடுத்துக்கொள்ளாமல் விரைவாக முடிக்கவேண்டும். நேரம் அதிகமாகிவிட்டது, அதற்காக என்னை மன்னிப்பீர்களா? நாளை மதியம் நான் பேசவேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் வருவீர்கள் என விரும்புகிறேன். “நாங்கள் இந்த மலையில் நாற்பது வருடங்களாக இருக்கிறோம்” என்ற பொருளின் கீழ் பேச விரும்புகிறேன். 51. என்னுடைய ஊழியத்தின் ஒவ்வொரு பகுதியிலும், பல காரியங்களை ஒருங்கிணைக்க நம்முடைய தேவன் என்னை உபயோகித்தார் என்று விசுவாசிக்கிறேன். எனினும், எனது ஊழியத்தைக் காட்சிப்பொருளாக மாற்ற முயற்சித்ததேயில்லை. ஊழியத்தைக் காட்சிப்பொருளாக மாற்றுகிற அந்த ஒரு விஷயத்தில் இயேசுகிறிஸ்து குறைவுபட்டிருந்தார். சில காலத்துக்கு முன்பு ஒருவர், “சகோதரர் பிரன்ஹாமே, நீங்கள் பிரசங்கிக்கும் பெரிய இன்னார் - இன்னாருடன் இருக்க வேண்டும்” என்றார். சகோதரர்களாக இருந்துகொண்டு அப்படி பேசிக்கொண்டிருந்தனர். கிறிஸ்துவின் சரீரத்தில் என் நிலைபாடு என்னவென்றால், ஆவிக்குரிய காரியத்தில் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றும் ஆவிக்குரிய முடிவுகளைக் கண்காணிக்கும் அந்த நோக்கத்திற்காகவுமே நான் நியமிக்கப்பட்டிருக்கிறேன். ஆவிக்குரிய பகுதியை கவனிக்கும்படியாகவே கிறிஸ்து என்னை இங்கே வைத்திருக்கிறார். நான் இங்கே இருப்பதின் நோக்கம் அதுதான். பெரும்புள்ளிகள் (shots) என்று அழைக்கப்படுகின்ற அவர்கள்... பாருங்கள், அந்த மனிதன் (நான் குறிப்பிட்டு பேசிக்கொண்டிருந்த, இங்கே அமர்ந்திருந்த அவர்)... நாம் பெரும்புள்ளிகளாகவும் அதேவேளையில் கிறிஸ்தவர்களாகவும் இருக்க முடியாது. மேலே போகிற வழி தாழ்மையில் உள்ளது. தன்னை தாழ்த்துகிறவனெவனோ அவன் உயர்த்தப்படுவான். 52. சில காலத்திற்கு முன்பு ஒரு மகத்தான ஸ்தாபனத்தின் சிறந்த மனிதர் என்னை அழைத்து, “சகோ. பிரன்ஹாமே, நீர் இதையும் - அதையும் மட்டும் பேசுவதை விட்டுவிடுவீர்களானால், நாம் இன்னின்ன - இன்னின்ன மகத்தான காரியங்களை நடப்பிக்கலாம்” என்றார். நான் இதையும் - அதையும் பேசுவதை விட்டுவிட வேண்டுமா? அதுதான் என்னுடைய ஊழியமாயிருக்கிறது; அதுவே என் ஜீவன், அதிலிருந்து தான் நான் செழிக்கிறேன். எந்த ஒரு காரியத்திற்காகவும் தேவனுடைய வார்த்தையின் பேரில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். மிகச் சரியாக நான் அதில் நிலைத்திருக்க வேண்டும். மேலும் அவர் “நீங்கள் இது போன்ற சிறிய குழுக்கள், வெறுமனே பெரும்புள்ளிகள் அல்லாத (smaller) மனிதர்களுடன் சேர்ந்து உங்களை ஏமாற்றிக் கொள்கிறீர்கள். அதிலிருந்து வெளியே வாருங்கள்” என்றார். அந்த மனிதன், தான் என்ன பேசிக் கொண்டிருந்தார் என்பதை அறியாமல் இருந்தார். நம்முடைய போதகரிடமும் அதே காரியம் கூறப்பட்டதை அவர் மாத்திரம் அறிந்திருந்தால்... (ஒலிநாடாவில் காலியிடம்).. இயேசுகிறிஸ்துவிடம் அவருடைய சொந்த சகோதரர்கள், “இவ்விடம் விட்டு, அங்கே போய்... எல்லாரும் பார்க்கும்படியாக கிரியை செய்து... உணர்ச்சிவசப்படுதலை (hit the big nerve centers) உண்டாக்கும்” என்று சொன்னார்கள். அவரோ, “என் வேளை இன்னும் வரவில்லை, உங்கள் வேளையோ எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறது” என்றார். மீனவர்கள், கல்வியறிவற்றவர்கள் மற்றும் எழுதப்படிக்கத் தெரியாத மக்களுடன் அவர் தொடர்பு கொள்கிறார். பாருங்கள், உலகம் எதை சிறந்ததென்று அழைக்கிறதோ, அதை தேவன் பைத்தியம் என்று அழைக்கிறார். 53. அந்த நாளில் இருந்த மதகுருமார்கள், ஏசாயா 40-ம் அதிகாரத்தில் இருக்கிற வேத வசனத்திற்கு எந்த வகையான வியாக்கியானத்தைக் கொடுத்திருப்பார்களோவென்று நான் வியப்புறுகிறேன். ஒருவேளை தேவன் பரலோகத்தின் தாழ்வாரங்களை இறக்கி, 'தூதர்கள் இசைக்குழு' இசைமுழங்க, யோவான் ஸ்நானகன் அணிவகுத்து வருவான் என்று போதித்திருப்பார்கள். மலைகள் குன்றுகள் தாழ்த்தப்பட்டு, பள்ளங்களெல்லாம் உயர்த்தப்பட்டு, மலைகள் ஆட்டுகடாக்களைப் போலவும் துள்ளி, இலைகளெல்லாம் கரங்களைத் தட்டின அந்த நாள் எப்படிப்பட்டதாய் இருந்தது? ஒரு மனிதன் தெளிவற்ற தோற்றம் கொண்டவனாய் (இப்படி சொல்வதற்கு மன்னிக்கவும், தவறாக சித்தரிக்கும்படி எண்ணங்கொள்ளவில்லை, ஆனால் ஒரு கருத்தை வலியுறுத்த விரும்புகிறேன்), சவரம் செய்யப்படாத முகத்துடன் வனாந்திரலிருந்து வெளியே வந்தான். ஒரு வேளை அவன் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை குளித்திருக்கலாம். அவன் செம்மறித்தோலை உடுத்திக்கொண்டு, கணுக்கால் அளவு சேற்றில் நின்று கொண்டிருந்தவனாக காணப்பட்டான். அப்பொழுது தான் பள்ளங்களெல்லாம் உயர்த்தப்பட்டு, மலைகள் குன்றுகள் தாழ்த்தப்பட்டது. பின்புறம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள ஒரு பெரிய இடத்தில் நின்று கொண்டிருக்கும் ஒரு மகத்தான நபராக அவன் காணப்படவில்லை . அது பண்டைய பாணியிலான நபராயிருந்தது. அந்த விதமான நபர்களே தேவனுக்கு தேவை. அது சரியே. தாழ்மையுள்ளவர்களாய் இருங்கள். 54. சகோதரர்களே, நான் இந்த மனிதர்களில் இருக்கின்ற காரியத்தை விரும்புகிறேன். சற்று நேரத்துக்கு முன்பு அந்த மனிதன் சொன்ன கூற்றுப்படி, “இந்த வியாபார புருஷர்கள்..” சில நேரங்களில் துப்புரவுப் பணியைச் செய்பவர்கள் இது போன்ற பெரிய கூட்டங்களில் தங்களை அறியச் செய்ய தயங்குவார்கள். ஆனால் இங்குள்ள இந்த வியாபார புருஷர்களோ, அவர்கள் பெற்றிருக்கிற விசுவாசமும், காரியங்களும், அது எனக்கு அவர்களில் இருக்கிற தாழ்மையை காண்பிக்கிறது. அது நேராக வந்து, தேவன் அவர்கள் மூலமாக செய்ததையும், இந்த பெந்தெகொஸ்தே ஆசீர்வாதங்களையும் அறிக்கை செய்யும். இவர்கள் உலகத்தின் மகத்தான மனிதர்களாய் இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் கவனித்தால், இவர்கள் உலகம் முழுவதும் சென்று, தங்கள் சொந்த பணத்தை செலவிட்டு, மற்ற சகோதரர்களுக்கு உதவி செய்து இந்தக் குழுவில் இணைக்க முயற்சி செய்கிறார்கள். வெளிச்சம் பிரகாசிக்கக்கடவது. 55. இந்த காலை வேளையில், நான் பங்குகொண்ட எல்லா கூட்டங்களிலும், இந்த கூட்டத்தைக் குறித்து இதுவே என்னுடைய கருத்தாய் இருக்கிறது என நினைக்கிறேன். இவர்கள் சத்தமிட்டு கர்த்தரைத் துதிப்பதைக் கேட்கிறேன். நானும் அதையே விரும்புகிறேன். ஆனால், மக்கள் அதிக சத்தமிட்டு கர்த்தரைத் துதித்தும், ஒரு பல்வலியை சுகமாக்கும் அளவிற்கு கூட போதுமான விசுவாசம் இல்லாதிருப்பதை நான் கண்டிருக்கிறேன். பாருங்கள், அது தேவனுடைய ஆசீர்வாதங்களில் வெறுமனே சில. ஆனால் அதுவே தேவனுடைய வல்லமையோடு வரும்போது, அவர்கள் அமர்ந்திருந்து (settle down) பரிசுத்த ஆவியின் கிரியைகளை... நீங்கள் பகுத்தறிதல் நிகழும் கூட்டங்களை கவனித்துப் பார்த்தால் அதைக் கண்டுக்கொள்வீர்கள். இந்தக் காலை, இந்தக் கட்டிடத்தில் நான் கவனித்த அதேக் காரியங்களைப் போல, எல்லாரும் அமைதியாக தரித்திருந்து (quiet), பரிசுத்தத்தோடும் பயபக்தியோடும் உத்தமமாக தேவனை அணுகும்போது, உண்மையான அந்த நம்பிக்கையானது அவர்களுடைய முகபாவனையில் ஏற்படுத்தும் மாற்றத்தையும் மற்றும் அதுபோன்ற காரியங்களையும் உங்களால் காணமுடியும். 56. கிறிஸ்தவ வியாபாரிகளின் சங்கம் நடத்திய கூட்டத்தில் அவர்களோடு நான் இருந்ததிலேயே, இந்த காலை ஆகார கூட்டம் மகத்தான கூட்டமாக எனக்கு இருக்கிறது. இங்கே, நான் சார்ந்திருக்கின்ற ஒரே ஒரு குழு இவர்கள் தான். நான் எந்த ஒரு ஸ்தாபனத்தையும் சேர்ந்தவன் அல்ல, ஆனால் நான் சார்ந்திருக்கின்ற ஒரே ஒரு குழு இதுவே. நான் இந்த மக்கள் குழுவை பாராட்டுகிறேன். ஏனென்றால் இங்கே அசெம்பிளிஸ், தேவசபை, போர்ஸ்கொயர் (Foursquare), பாப்டிஸ்ட், பிரஸ்பிடெரியன், ஒருத்துவம், இருத்துவம், திரித்துவம் எல்லாரும் ஒன்றாக அமர்ந்திருக்கிறார்கள். இந்த ஒரு காரியத்திற்காகவே நான் நின்று கொண்டிருக்கிறேன். யாக்கோபு துரவு வெட்டினதைப் போன்று நான் அதைக்குறித்துப் பேசியிருக்கிறேன். நான் சரியான வார்த்தைகளை உபயோகித்து காரியங்களை விளக்கினேன் என்று நான் நினைக்கவில்லை, இருப்பினும் நீங்கள் புரிந்துகொள்ளும் அளவிற்கு என்னால் கூற இயலும். அவன் ஒரு துரவு வெட்டினான், பெலிஸ்தியர்கள் அவனை அங்கிருந்து துரத்தினார்கள். அவன் அதற்கு 'துர்க்குணம்' (malice) என்று பெயரிட்டான். அவன் மற்றொரு துரவு வெட்டினான், அதற்கு ‘வாக்குவாதம்’ (strife) என்று பெயரிட்டான். பிறகு அடுத்த கிணறு தோண்டி, “இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார்” என்றான். அதுவே நம்மெல்லாருக்குமான இடமாய் இருக்கிறது. (ஆம் ஐயா). அதுவே நாம் கூடிவரத்தக்க, உன்னதங்களில் ஒன்று கூடிவரத்தக்கதான இடமாய் இருக்கிறது. நம்மை தொல்லைப்படுத்துகிற ஸ்தாபனத் தடைகள் அங்கே இல்லை. நாமெல்லாரும் கிறிஸ்துவுக்குள் ஒரே குழுவாக இருக்கிறோம். 57. என்னால் மட்டும் மகத்தான சபைகளும், பாடுபடுகிற ஆவிக்குரிய சபைகளும், கிறிஸ்து இயேசுவில் இருந்து வெளிவரும் மெய்யான திராட்சைச் செடியோடு, பெந்தெகொஸ்தே குழுக்கள் ஒன்றுகூடி சகோதரர்களாக இருப்பதைக் காணமுடிந்தால்... அவர்களுடைய ஸ்தாபனங்களைக் குறித்து எனக்கு கவலை இல்லை. அவர்கள் விரும்பியதை வைத்துக் கொள்ளலாம். அது எல்லாம் சரி. ஆனால் முற்றுப்புள்ளி வைத்து நிறுத்திவிட வேண்டாம். கரங்களை வெளியே நீட்டி, மற்ற நபரையும் உள்ளே கொண்டு வாருங்கள். பாருங்கள், அனைவரும் கூடி வருவோம். பாருங்கள், இவ்வாறு நடப்பதை என்னால் காண முடிந்தால் (நான் அறிந்தவரை பயபக்தியுடன் இதை கூறுகிறேன்), இக்காலையில் இவ்வாறு நடப்பதை என்னால் காண முடிந்தால், அந்த வயதான சிமியோன், “உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்” என்று சொன்னதைப்போல, நானும் கூற தயாராக இருக்கிறேன். அந்த நேரமானது விரைவில் வரவேண்டியதாயிருக்கிறது, ஏனென்றால் நாம் ஒன்றுகூடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட போகிறோம். அதை மாத்திரம் நீங்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நன்றி சகோதரனே.